உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தராலியில் மேகவெடிப்பு காரணமாக அதி கனமழை பெய்தது. இதில் கீர் கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஏராளமான ஓட்டல்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மீட்பு பணியில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு, இந்தோ – திபெத் காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 650 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களில் 9 ராணுவ வீரர்களும் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த, பாகீரதி ஆற்றில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களை இந்த பாலத்தின் வழியாக அழைத்து வந்து, வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.