அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் வர்த்தக ரீதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் மீண்டும் இன்று (ஆகஸ்ட் 6) இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை விதித்துள்ளார். இந்த கூடுதல் வரியை அமல்படுத்தியதன் மூலம் அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள வரி இப்போது 50 சதவீதத்தை எட்டியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனே இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை என்று கூறினார். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால்வளத் துறையுடன் தொடர்புடைய மக்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்று பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளார். “விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க நான் ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தால், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று அந்த மாநாட்டில் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறினார்.