70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சோதனை முறையில் செயல்படுத்திவருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைவில் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு சென்று பெறுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவர்களது வீடுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 10 நியாயவிலை கடைகள் என்ற அடிப்படையில் 100 நியாயவிலை கடைகளில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தலா 10 கடைகளுக்கு உட்பட்ட கார்டுதாரர்களின் வீடுகளில் நேற்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி வெற்றிகரமாக அமைந்தாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 16 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.