நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்து மதிப்புகள் குறைவான, உடலுக்கு ஆரோக்கியமற்ற உணவுகளை ஜங்க் ஃபுட் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, இந்த ஜங்க் உணவுகளுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதாவது ஜங்க் ஃபுட் அடிக்கடி உட்கொள்பவர்களுக்கு, நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 41% அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறியுள்ளது.
இந்த ஆய்வில், 55 முதல் 74 வயதுடைய சுமார் 1,02,000 பெரியவர்கள் கலந்துகொண்டனர். இந்த நபர்கள் சுமார் 12 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டதில், 1,706 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஜங்க் உணவுகள் அதிகம் சாப்பிட்ட 41% பேருக்கு ஆபத்து அதிகம் இருந்தது.
ஜங்க் உணவுகள் என்னென்ன?
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகள், பர்கர், பீட்ஸா, ஃபிரெஞ்சு பிரைஸ் போன்ற உணவுகள் ஜங் உணவுகளாகும். இவைகள் அதிக கலோரிகள், அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்புகளை கொண்டது. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே இவற்றை தவிர்த்து, வீட்டிலே சுத்தமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.