Friday, August 1, 2025

பாலியல் வழக்கில் சிக்கிய பாடகர் ‘வேடன்’! ஏமாற்றி விட்டதாக கதறும் பெண் மருத்துவர்!

கேரளாவையே உலுக்கியிருக்கும் ஒரு செய்தி… ஒடுக்கப்பட்டவர்களின் சக்திவாய்ந்த குரல் எனப் புகழப்பட்ட ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு! யார் இந்த வேடன்? அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்ன? இதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சித் தகவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

கேரள ராப் இசை உலகில், ஒரு தலித் குரலாக விஸ்வரூபம் எடுத்தவர் வேடன் என்ற ஹிரந்தாஸ் முரளி. தனது கூர்மையான பாடல் வரிகளால் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். ஆனால், இப்போது அவர் மீது ஒரு இளம் பெண் மருத்துவர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு, கேரளாவையே அதிர வைத்திருக்கிறது.

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 2021 முதல் 2023 வரை, பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அந்தப் பெண் மருத்துவர் கொச்சி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தை நம்பி, பல இடங்களுக்குச் சென்றதாகவும், ஆனால் வேடன் திருமணத்திற்கு மறுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தனது புகாரில் கதறியுள்ளார்.

இதையடுத்து, போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 376(2), அதாவது ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், வேடனுக்கு இது முதல் முறையல்ல. இவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர்தான். சில மாதங்களுக்கு முன்பு, கஞ்சா வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழும், சிறுத்தைப் பல் பதக்கம் அணிந்திருந்ததாக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.

அப்போது, ஆளும் சிபிஐ(எம்) கட்சி உட்பட பலரும் அவருக்கு ஆதரவாக நின்றனர். பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்ப்பதால், அவர் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார் என்ற அனுதாப அலை உருவானது. கேரள அரசே, தனது நிகழ்ச்சிகளில் அவரைப் பாட வைத்தது. உச்சகட்டமாக, காலிகட் பல்கலைக்கழகம், அவரது பாடலை மைக்கேல் ஜாக்சனின் பாடலுடன் ஒப்பிட்டு, பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கும் அளவுக்கு அவர் புகழ் உயர்ந்தது.

ஒருபுறம், ஒரு புரட்சிகரமான கலைஞன் என அரசும், மக்களும் அவரைக் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், மறுபுறம் இப்போது அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தப் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு, அவரது பிம்பத்தையே உடைத்தெறிந்துள்ளது.

கலை, போதை, அரசியல், இப்போது பாலியல் குற்றச்சாட்டு எனப் புயலைக் கிளப்பியிருக்கும் இந்த வழக்கில், சட்டம் தனது தீர்ப்பை எப்படி எழுதப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News