Tuesday, July 29, 2025

டிரம்ப் வைத்த பெரிய ஆப்பு! புஷ், பைடனுக்கு பிறகு கொண்டு வரும் அதிரடி மாற்றம்! யாருக்கு அடி?

டிரம்ப்பின் சமீப ஆட்சி காலத்தில், அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்குச் சிக்கல் தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஹெச்–1பி வேலைவிசா தேர்வு முறை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள இந்தியர்கள் மட்டுமன்றி, அங்கு செல்ல விரும்பும் பலருக்கும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப்,அமெரிக்க அதிபராக வந்தப் பிறகு, முதற்கட்டமாக சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அப்படி, குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக விசா பெற்று அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களுக்கும்கூட கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டன.டிரம்ப் , இப்போது இந்த அறிவிப்புகள் மூலமாக அமெரிக்காவுக்கு வேலைக்காகச் செல்வதையே கடினமான ஒன்றாக மாற்ற போகிறார்.

இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த குடியேற்ற சமூகத்திடையே கடும் விமர்சனத்தைக் கிளப்பினாலும், டிரம்ப் அதைப் பற்றிய கவலையின்றி தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். தற்போது, அந்தத் தொடரில் அடுத்த கட்டமாக, ஹெச்–1பி விசா முறையில் மாற்றங்களை செய்யும் திட்டம் தயாராகி வருகிறது.

இதற்கான ஆலோசனைகள் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை அதைப் பற்றி யாரும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனால் தற்போது, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவையின் (USCIS) புதிய இயக்குநராகப் பதவியேற்றுள்ள ஜோசப் எட்லோ, இந்தத் திட்டங்கள் குறித்து துல்லியமாகப் பேசியுள்ளார். அவர், சட்டப்பூர்வ குடியேற்ற முறையை நவீனமயமாக்கும் நோக்கத்தில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “ஹெச்–1பி விசா சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம். அமெரிக்க பொருளாதாரத்துக்கும், உள்ளூர் தொழிலாளர்களுக்கும் பயன்படும் வகையில் மட்டுமே இது இருக்க வேண்டும். மாறாக, அமெரிக்க ஊழியர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க இந்த விசா பயன்படுத்தப்படக்கூடாது” என்றார்.

டிரம்ப் நிர்வாகம் இதுவரை சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வந்தது. ஆனால், USCIS இயக்குநரின் இந்தக் கருத்துகள், சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கே இப்போது மாறுதல்கள் வரவிருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

தற்போதைய ஹெச்–1பி விசா முறை, ஆண்டுக்கு 85,000 பேருக்கு வழங்கப்படும் வகையில் உள்ளது. விண்ணப்பிக்கும் அனைவரும் ஒரு கணினி மூலம் ‘லாட்டரி’ முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது முற்றிலும் அடிப்படையாகும் அதிர்ஷ்டம்தான். ஆனால், இந்த முறையை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்.

அதற்குப் பதிலாக, விண்ணப்பதாரரின் திறன், கல்வித் தகுதி, வேலை அனுபவம் மற்றும் அவர்களுக்குத் தரப்படும் ஊதியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு விசா வழங்கும் புதிய முறை கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் அமலாக்கப்படும்போது, இந்தியர்கள் பெரிய எண்ணிக்கையில் ஹெச்–1பி விசாவை பயன்படுத்திக் கொள்வதால், இவை அவர்களுக்கு நன்மையா அல்லது சிக்கலா என்ற கேள்வியும் எழுகிறது. திறமையுள்ளவர்களுக்கு இது நல்லதாயிருக்கலாம். ஆனால், இலகுவான லாட்டரி முறையில் வாய்ப்பு கிடைத்திருக்கக்கூடியவர்களுக்கு இது தடையாக மாறக்கூடும்.

இதேபோல, அமெரிக்க குடியுரிமைத் தேர்விலும் மாற்றம் வரக்கூடியதற்கான சாத்தியமும் உருவாகியுள்ளது. தற்போதைய குடியுரிமை தேர்வு கடினமானதல்ல என்றும், மனப்பாடம் செய்தால் எளிதாக பாஸ் செய்யமுடியும் என்றும் USCIS இயக்குநர் எட்லோ தெரிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு வரை இந்தத் தேர்வில் கேள்விகள் அனைத்தும் ஒரு நிலைத்த கட்டமைப்பில் இல்லாமல் இருந்தன. புஷ் நிர்வாகம் அதை மாற்றி, மொத்தம் 100 கேள்விகள் கொண்ட தேர்வை அறிமுகப்படுத்தியது. இதில் 10 கேள்விகள் கேட்கப்பட்டால், குறைந்தபட்சம் 6 கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து டிரம்ப் தனது 2016–2020 ஆட்சிக்காலத்தில் இந்த எண்ணிக்கையை 128 ஆக உயர்த்தினார். ஆனால், பைடன் நிர்வாகம் அதனைத் திரும்பப் பெற்றது. தற்போது, டிரம்ப் மீண்டும் அதனை கொண்டு வர முனைகிறாரா? என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியர்களுக்குப் புதிய சவால் இப்போது உருவாகியுள்ளது. விசா மற்றும் குடியுரிமை தொடர்பான நடைமுறைகள் அதிக கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படும்போது, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தேடும் இந்தியர்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், திறமையான மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இது வாய்ப்பாகவும் இருக்கலாம்.

இனி இதற்கான விளைவுகள் நேரடியாக அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கே தெரியும். இந்த நடவடிக்கைகள் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையுமா? அல்லது புதிய தடையாக மாறுமா? என்பதை எதிர்காலமே தீர்மானிக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News