Friday, July 18, 2025

அகமதாபாத் விமான விபத்து பற்றி வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்!

கடந்த மாதம் 12ம் தேதி, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனை நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம் நம் மனங்களிலிருந்து இன்னும் நீங்கவில்லை. ஒருவர் மட்டும் விமானத்திலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்தவர்களும் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 260-ஆக அதிகரித்தது. இந்த கொடூர விபத்து இந்தியர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிவிட்டது.
இப்படிப்பட்ட விபத்தை விசாரணை செய்யும் நாடு, விமான விபத்து நடந்த 30 நாட்களுக்குள் முதற்கட்ட கண்டுபிடிப்புகளுடன் முதல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதுவே சர்வதேச விமானப் போக்குவரத்து விதி.

அந்த வகையில், அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைப் பற்றிய ஆரம்பகட்ட அறிக்கை கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு, இரண்டு இன்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டது. விபத்தை தொடர்ந்து விமானத்தின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் ஜூலை 21ம் தேதிக்குள் ஆய்வுப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில் ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களில் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் தொழில்நுட்ப நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவில் சுவிட்சுகளில் எந்தப் பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியளிப்பதோடு மேலும் பல குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் வழி வகுப்பதாகவே இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news