சமீபத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் மோதலில் இந்தியா பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. மேலும் பாகிஸ்தானின் தாக்குதல்களும் தவிடுபொடியாக்கப்பட்டன. அந்த சம்பவத்துக்கு பிறகு இந்தியா தனது பாதுகாப்புத் துறையை பலப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக BM-04 என்னும் குறுகிய தூரம் பயணித்து தாக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.
வேகம் மற்றும் துல்லியத்தில் இது மிகவும் திறன் மிக்கதாக இருக்கிறது. மேலும் இந்த ஏவுகணை மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த BM-04 ஏவுகணை, இந்திய விமானப்படையின் அதாவது IAF-யின் புதிய மைல்கல்லாக உருவெடுத்து வருகிறது. இது எதிரியின் விமான தளங்கள், கட்டளை மையங்கள் மற்றும் மொபைல் ஏவுகணை அமைப்புகளை தாக்கி அழிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஏவுகணைகளில் இரண்டு கட்டங்களை கொண்ட திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மேல்பகுதியில் உள்ள Common Hypersonic Glide Body மூலம் இது மேக் 5ஐ விட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியது. இது பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் சக்தி வாய்ந்தது. பிருத்வி ஏவுகணையின் வரம்பும், துல்லியமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உட்பட்டது. BM-04 ஏவுகணை அவற்றைத் தாண்டி மேம்பட்ட செயல்திறனையும் பரந்த அளவில் தாக்கும் திறனையும் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் வழக்கமான தாக்கும் திறன்களை பல மடங்கு அதிகரிக்கும்.
BM-04 ஏவுகணை 2025 பிப்ரவரி 28 முதல் மார்ச் 2ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘விக்யான் வைபவ்’ பாதுகாப்பு கண்காட்சியில் இந்த ஏவுகணை முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு துறையில் இதற்கான வரவேற்பு அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.