இப்போது உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்திருக்கிறார்.
“50 நாட்கள். அதற்குள் அமைதி ஒப்பந்தம் இல்லையென்றால்… ரஷ்யா மீது 100 சதவீத வரி!” — இதுதான் தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள மிகக் கடும் எச்சரிக்கை.
உக்ரைனுடன் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிற்கு 50 நாள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடுவில் மாஸ்கோ சமாதானத்திற்கு வராமல் இருந்தால், ரஷ்யா மட்டுமல்ல… ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிசக்தி வாங்கும் நாடுகளுக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கிறார்.
அமெரிக்காவின் “இரண்டாம் நிலை தடைகள்” என அழைக்கப்படும் இந்த புதிய திட்டம், ரஷ்யாவை மட்டுமல்ல, சீனா, இந்தியா போன்ற நாடுகளையும் பொருளாதார ரீதியாக பாதிக்கக்கூடியது.
இது வெறும் பேச்சல்ல. வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோரும் இது மேசையில் உள்ள முக்கியமான விருப்பம் என்றும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.
இப்போது இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு உயர்ந்தது. பங்குச்சந்தைகளும் ஓரளவு வளர்ச்சி கண்டன. முதலீட்டாளர்கள் ஒரு பக்கம் நிம்மதியடைந்தாலும், மற்றொரு பக்கம் வரவிருக்கும் அழுத்தங்களை உணர ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்நிலையில், டிரம்ப் உக்ரைனுக்கான புதிய ஆயுத உதவித் தொகுப்பையும் அறிவித்துள்ளார். இதில், ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிரான பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்புகளும் அடங்குகின்றன.
அத்துடன், “நாங்கள் ஆயுதங்களை உருவாக்குவோம், ஆனால் செலவை நேட்டோ நாடுகளே ஏற்க வேண்டும்” என டிரம்ப் நேரடியாகக் கூறியிருக்கிறார்.
“நாங்கள் அதை வாங்கப்போவதில்லை… நாங்கள் அதை தயாரிக்கப்போகிறோம்…அதற்கு அவர்கள் பணம் செலுத்தட்டும்!” என்றிருக்கிறார்.
மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, டிரம்புடன் நேரடியாக பேசி இதற்காக நன்றியை தெரிவித்திருக்கிறார் குறிப்பாக அமைதி, நீதி மற்றும் நிலைத்த ஆதரவைப் பற்றிய விவாதங்களும் நடந்திருக்கின்றன.
இந்த 50 நாட்கள் உலக வர்த்தகத்துக்கும், அரசியலுக்கும் மிக முக்கியமான முடிவுகளைக் கொண்டுவரப்போகின்றன. அமைதி வருமா? அல்லது ஒரு புதிய பொருளாதார மோதல் வருமா? என்று உலகம் தற்போது பதற்றத்தில் காத்திருக்கிறது…