Tuesday, July 15, 2025

”எப்போ வேணாலும் வெடிக்கலாம்” சீனாவை எதிர்க்கும் ‘குட்டி’ நாடு கைகட்டி ‘வேடிக்கை’ பார்க்கும் அமெரிக்கா?

நீண்ட வருடங்களாக நீடித்து வரும் சீனா – தைவான் இடையிலான முட்டல், மோதல்கள் தற்போது அடுத்தகட்டத்தை எட்டியிருக்கின்றன. இதற்கு வழக்கம்போல அமெரிக்காவே முக்கிய காரணமாக இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

குட்டி நாடான தைவானை சீனா தனது பகுதியாகக் கருதுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தைவானை சுற்றி, சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஆனால் தைவான் அரசாங்கம் சீனாவின் உரிமையை ஏற்க மறுக்கிறது. தைவானின் எதிர்காலத்தை அங்கு வாழும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது. இதுதான் தற்போது பிரச்சனைக்கு முழுமுதற் காரணமாகும்.

சொல்லப்போனால் இதற்கு அமெரிக்காவும் ஒரு காரணம் தான். ஏனெனில் சீனா – தைவான் பிரச்சினையில் அமெரிக்கா தைவானிற்கு ஆதரவு அளிக்கிறது. இதற்காக HIMARS என்னும் அதிநவீன ராக்கெட் ஏவுதளத்தினை அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. இதை வைத்து தற்போது தைவான் ‘ஹான் குவாங்’ எனப்படும் மிக நீண்ட ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் சொந்த தயாரிப்பான ஸ்கை ஸ்குவாட் ஏவுகணையையும், தைவான் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறது. இது மட்டுமின்றி டாங்கிகள் முதல் நீர்மூழ்கி கப்பல்கள் வரை, ஏராளமான ராணுவ உபகரணங்களையும் அண்மையில் வாங்கி குவித்துள்ளது. ஒருவேளை சீனா நேரடி தாக்குதலை தொடங்கினால், அதை எதிர்கொள்ள தைவான் தயாராகி வருகிறது.

இந்த HIMARS ராக்கெட் ஏவுதளத்தை ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் பயன்படுத்தி வெற்றி கண்டது. இதையடுத்து உலக நாடுகள் மத்தியில் HIMARS வெகுவாக கவனம் பெற்றுள்ளது. 300 கிலோமீட்டர் தூரத்தையும் துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது என்பதால், இந்த ராக்கெட் ஏவுதளத்தை தைவான் பயன்படுத்தி இருப்பது, சீனாவிற்கு வெளிப்படையான எச்சரிக்கையாக பார்க்கப் படுகிறது.

ஆனால் தைவானின் இந்த செயலை சீன பாதுகாப்பு அமைச்சகம், ”வடிகட்டிய முட்டாள்தனம்” என புறக்கணித்து இருக்கிறது. என்றாலும் அமெரிக்கா இந்த விஷயத்தில் தைவானுக்கு ஆதரவு வழங்குவதால், தைவானின் ராணுவ செயல்பாடுகளை சீனா ஒரேயடியாக புறக்கணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news