ஈரான் தனது வான் எல்லையை மறுபடியுமாக மூடியுள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுவது மீண்டும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இன்று காலை முதல் தனது மேற்கு மற்றும் தென்மேற்கு வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஈரானால் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஈரானின் இந்த நடவடிக்கை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து பாகிஸ்தான், கத்தார் மற்றும் துருக்கி மார்கமாக பயணிக்கின்றன. இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதோடு நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையே போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம், மீண்டும் உளவுத்துறை தாக்குதல்கள், சைபர் தாக்குதல்கள் மற்றும் கடல் வழியான பதிலடி தாக்குதல்கள் என களம் சற்றே சூடு பிடித்தது.
இந்த தாக்குதல்களால் கடந்த ஜூலை 10ம் தேதி, ஈரானில் உள்ள இராணுவ முகாமில் வீரர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டதால் இந்த குண்டுவெடிப்பு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு வான்பரப்பை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியானை குறி வைத்து ஆறு ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது. இந்த தாக்குதலில் அவர் காயம் அடைந்தாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் தன்னை கொல்ல சதி செய்வதாக மசூத் பெஸ்கியான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.