உலகத் தரப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தும் வகையில், வடகொரியா தற்போது ரஷ்யாவுக்குத் தொடர்ந்து பீரங்கி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. இது, உக்ரைனில் நடக்கும் போரில் ரஷ்யாவை ஆதரிக்க வடகொரியாவால் கொடுக்கப்படும் நேரடி மற்றும் மிகப் பெரிய உதிரமழை என்றே சொல்லலாம்.
தென் கொரியாவின் பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்ததன்படி, உக்ரைனில் ரஷ்யா நடத்திய போரை ஆதரிக்க, வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களையும் பீரங்கி குண்டுகளையும் அதிக அளவில் அனுப்பி வருகிறது.இது வரை வட கொரியா ரஷ்யாவிற்கு 152 மிமீ பீரங்கி குண்டுகளை 12 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுகளுக்கு வழங்கியுள்ளது .
இதோடு, 28,000 லாரிகள் மற்றும் Container-களில் இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக தென் கொரியாவின் ராணுவ புலனாய்வு தெரிவித்துள்ளது.
அதோடு, கடந்த அக்டோபர் 2023 முதல் இன்று வரை, வடகொரியா சுமார் 13,000 துருப்புக்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த தாக்குதல்கள் மட்டுமல்லாமல், ஜூலை அல்லது எதிர்வரும் ஆகஸ்ட் மாதங்களில் கூடுதல் துருப்புக்களை அனுப்பும் வாய்ப்பும் இருப்பதாக சியோலின் உளவு அமைப்புகள் எச்சரிக்கின்றன.
மேலும், ரஷ்ய ஊடகங்களின் தகவல்படி, 5,000 இராணுவ கட்டுமானத் தொழிலாளர்களும் 1,000 சப்பர்களும் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் நியமிக்கப்பட உள்ளனர். இது, ரஷ்யாவின் முன்வரிசை கட்டுப்பாடுகளை பலப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
கடந்த ஜூன் 26 அன்று, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு பியோங்யாங்கிற்கு சென்று கிம் ஜாங் உனை நேரில் சந்தித்ததும், இந்த ஒத்துழைப்பு இன்னும் வலுப்பெறத் தொடங்கியதாக கூறப் படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யா தற்போது உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க்(Donetsk),சபோரிஜியா (Zaporizhzhia),கெர்சன்(Kherson),லுஹான்ஸ்க்(Luhansk) போன்ற நான்கு முக்கிய பிராந்தியங்களில் 81% நிலப்பரப்பை கட்டுப்படுத்தி வைத்துள்ளதாக NIS,அதாவது தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில், ரஷ்யா ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் புதிய தாக்குதல்களைத் தொடங்கும் சாத்தியக்கூறு மிக அதிகமாக இருப்பதாக உக்ரைனிய உளவுத்துறை எச்சரிக்கின்றது.
இதே வேளையில், இஸ்ரேல்–ஈரான் இடையேயான உறவுகள் மீண்டும் பதற்றமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் புதிய மோதல் வெடிக்கலாம் என்ற NIS எச்சரிக்கையும் வெளிவந்துள்ளது.
இப்போது இவைல்லாம் சேர்ந்து உலக அமைதி குறித்து மிகப் பெரிய கேள்விக்குறிகளை எழுப்புகிறது.