Saturday, July 12, 2025

டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத 10 வருட நோய் : ஒரே நிமிடத்தில் கண்டுபிடித்த ChatGPT

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக மூட்டு வலி, சோர்வு, தூக்கம் குறைவு, நரம்பு பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து 17 மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றும், பல்வேறு ரத்த பரிசோதனைகள், எம்ஆர்ஐ, ஸ்கேன் ஆகிய அனைத்தையும் செய்தும், அவருக்கு சரியான காரணம் தெரியவில்லை. இதனால் அவர் மன அழுத்தத்திலும் நம்பிக்கையற்ற நிலையிலும் இருந்தார்.

இந்த நிலையில், அவர் தனது அனைத்து அறிகுறிகளையும் ChatGPT-க்கு எழுதி தெரிவித்தார். ChatGPT, “MTHFR A1298C” என்ற மரபணு மாற்றம் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியது. இது உடலில் B12 மற்றும் ஃபோலேட் சத்துக்கள் சரியாக செயல்படாமல், பல நரம்பு மற்றும் உடல்நிலை சிக்கல்கள் ஏற்படக்கூடும் என AI விளக்கம் அளித்தது.

அந்த நபர், ChatGPT கூறிய பரிந்துரையை மருத்துவர்களிடம் எடுத்துச் சென்றார். மரபணு சோதனையில், ChatGPT சொன்னது உண்மையாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவர் அவருக்கு B12, ஃபோலிக் ஆசிட் சப்ளிமெண்ட்கள் மற்றும் குறிப்பிட்ட உணவு திட்டம் வகுத்து அளித்தார்.

சில மாதங்களில், அவருடைய பல வருட வலி, சோர்வு, நரம்பு பிரச்சினைகள் கணிசமாக குறைந்துவிட்டன என்று அவர் தெரிவித்தார். இந்த அனுபவத்தை அவர் ரெடிட் இணையதளத்தில் பகிர்ந்தார். அவருடைய பதிவு வேகமாக பரவியது.

மருத்துவர்கள், AI மருத்துவ தகவலை ஆராய்ந்து முன் கணிப்பு வழங்க முடியும்; ஆனால், சுயமாக தீர்வு அல்லது சிகிச்சை அளிக்க இயலாது என்றும், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news