உலகின் முதல் ATM (Automatic Teller Machine) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட்-பரோன் (John Shepperd-Barron) ஆவார். இவர் 1925-ஆம் ஆண்டு இந்தியாவின் மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் பிறந்தவர்.
அவருடைய பெற்றோர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவரது பிறப்பு இந்தியாவில் என்பதால், பலர் அவரை இந்தியர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
1965-ஆம் ஆண்டு ஒரு சனிக்கிழமை, ஜான் ஷெப்பர்ட்-பரோன் வங்கியில் பணம் எடுக்க சென்றபோது, வங்கி மூடப்பட்டிருந்ததால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் அவருக்கு பணம் தரும் இயந்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற யோசனை அவருக்கு தோன்றியது.

இந்த யோசனையை அவர் Barclays வங்கியிடம் முன்வைத்தார். வங்கியும் இதை ஏற்றுகொண்டது. இரண்டு ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு ATM இயந்திரம் உருவானது.
1967-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி, லண்டன் நகரில் உள்ள Barclays வங்கியில் உலகின் முதல் ATM நிறுவப்பட்டது. இந்த ATM-யில் ஆரம்பத்தில், ஒரு முறையில் £10 வரை மட்டுமே எடுக்க அனுமதி இருந்தது. இந்த கண்டுபிடிப்பு வங்கி சேவையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து 1980-90களில் உலகம் முழுவதும் ATM பயன்பாடு பரவியது.
இந்தியாவில் ATM-கள் நிதி சேவைகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்றது, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது டிஜிட்டல் பேமெண்ட் வளர்ச்சி காரணமாக சில நாடுகளில் ATM-கள் குறைந்து வருகின்றன.