இன்றைய கல்விச் சூழலில் உயர்கல்வி என்பது கனவாக மட்டுமல்ல, நிஜமாகும் வாய்ப்பாக மாறியுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பு பல மாணவர்களுக்கு நிதி இல்லாமல் நிழலாகிவிடுகிறது. அந்த நிழலை வெல்ல ஒரு வலிமையான திட்டத்தை மத்திய அரசு மாணவர்களுக்கு வழங்குகிறது — அதுவே பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை திட்டமான “PM-USP”.
இந்த திட்டத்தின் மூலம், தகுதி வாய்ந்த மாணவர்கள் வருடத்திற்கு ரூ.82,000 வரையிலான உதவித்தொகையைப் பெற முடிகிறது. இந்த தொகை கல்விக்காகவே பயன்படுத்தப்படவேண்டும் — கட்டணங்கள், புத்தகங்கள், பயணம், தங்கும் செலவுகள் என பலவகைத் தேவைகளை ஈடுகொடுக்க இந்த உதவித்தொகை மிக முக்கிய பங்காற்றும்.
இது எந்த மாணவர்களுக்கெல்லாம் பொருந்தும் தெரியுமா? 12-ம் வகுப்பில் குறைந்தது 80 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் முழுநேர பட்டப்படிப்பில் சேர்ந்து இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே வேறு கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், இந்த திட்டத்திற்கு தகுதி இல்லை.
இந்த திட்டத்தில் ,எஸ்சி மாணவர்களுக்கு 15%, எஸ்டி மாணவர்களுக்கு 7.5%, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27%, மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இப்போது, இந்த உதவித் தொகைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம். மிக எளிமையான ஆன்லைன் செயல்முறை தான். www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கே புதிய பயனாளராக பதிவு செய்து, உள்நுழைந்து PM-USP திட்டத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். கல்வி சான்றிதழ்கள், ஆதார், வருமான சான்று, புகைப்படம் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பொதுவாக அக்டோபர் இறுதிக்குள் இருக்கும். இந்த வருடம், 2025-26 கல்வியாண்டுக்கான விண்ணப்பம் ஜூன் 30 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறுகிறது.
எனவே திட்டத்தில் பங்கேற்க ….உடனே விண்ணப்பியுங்கள்!