அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, எலன் மஸ்க் மற்றும் அவரது டெஸ்லா நிறுவனத்தின் நிலை மிகவும் கடுமையாக மாறியுள்ளது. சமீபத்தில், மஸ்க் அறிவித்த புதிய அரசியல் இயக்கத்தால் டெஸ்லா பங்குகள் சந்தையில் கடுமையாக சரிந்து, ஒரே நாளில் \$68 பில்லியன் மதிப்பினை இழந்தது. இதனால் எலன் மஸ்கின் சொத்து மதிப்பும் \$15.3 பில்லியன் குறைந்துவிட்டது.
இதற்கு முன்பே, ஜூன் மாதத்தில் டிரம்புடன் மஸ்க் நடத்திய திடீர் கருத்து மோதல்கள் டெஸ்லா நிறுவனத்துக்கு மிக பெரிய பாதிப்பை உண்டாக்கியது. மஸ்க், கடந்த வாரம் அமெரிக்காவில் புதிய அரசியல் கட்சியை துவங்கிய போது, அரசு வெளியிட்ட சில வேலைகளை அழிக்கக்கூடிய மற்றும் தொழில்துறையை பாதிக்கக்கூடிய செலவு திட்டங்களை கடுமையாக விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்து,டிரம்ப் மற்றும் மஸ்க் இடையேயான கருத்து மோதல்கள் மேலும் தீவிரமாகி, டிரம்ப் மஸ்கை “தண்டவாளத்திலிருந்து விலகிச் சென்றவர்” என்று விமர்சித்துள்ளார். இதனால், மஸ்கின் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியங்களும் பாதிக்கப்படுமா என்ற பயம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்க அரசியல் சூழ்நிலைகளும், எலன் மஸ்க் தொடர்ந்து வலதுசாரி அரசியல் கருத்துக்களை முன்னிலைப்படுத்துவதாலும் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில், டெஸ்லாவின் மின்சார வாகன விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், சீன நிறுவனங்களான BYD, கிரேட் வால் போன்றவை, குறைந்த விலையில், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் வாகனங்களை சந்தையில் கச்சிதமாக வெளியிட்டு, வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால், டெஸ்லா போட்டியில் பின் தள்ளப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்தப் போட்டி சூழலில் டெஸ்லா பங்குகள் கடந்த சில மாதங்களில் 40 சதவீதம் வீழ்ச்சியடைந்து, தற்போது ஒரு பங்கு சுமார் \$289 அளவில் விற்பனை ஆகி வருகிறது.
மொத்தத்தில், மஸ்க் மற்றும் டிரம்ப் இடையேயான அரசியல் மோதல்களும், புது அரசியல் இயக்கமும், மற்றும் உலகளாவிய மின்சார வாகன சந்தையின் கடுமையான போட்டியும் எலன் மஸ்க் மற்றும் டெஸ்லாவின் எதிர்காலத்துக்கு பெரிய சவால்களாக உள்ளன என்றேக் கூறலாம்.