Friday, July 4, 2025

‘வெறும் சூதாட்டம்’ கம்பீர் – கில்லுக்கு Cricket ஜாம்பவான்கள் ‘கண்டனம்’

முதல் டெஸ்டில் தோல்வியை தழுவிய இந்திய அணி, தைரியமாக பும்ரா இல்லாமல் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதேபோல அனுபவ வீரர்கள் ரிஷப் பண்ட், கேஎல் ராகுலும் விக்கெட்களை விரைவாக பறிகொடுத்து ஏமாற்றி விட்டனர். சாய் சுதர்சனின் 3வது இடத்தில் இறங்கிய கருண் நாயரும், அவர்போலவே 31 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி விட்டார்.இதனால் சாய் சுதர்சனை நீக்கியது மோசமான முடிவாகவே பார்க்கப் படுகிறது.

இந்தநிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கிரிக்கெட் ஜாம்பவான்கள் குமார் சங்ககரா, டாம் மூடி ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி, ” இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு தடுமாறக் கூடியதாக இருக்கிறது. வெறும் 5 பேட்ஸ்மேன்களை மட்டும் வைத்து விளையாடுவது ஒரு சூதாட்டம்.

பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் ஆழத்தை ஏற்படுத்தக்கூடிய ஆல் ரவுண்டர்களை வைத்து, அணியை சரி செய்ய முயற்சிப்பது எப்போதும் வேலை செய்ததில்லை. டெஸ்ட் போட்டியில் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தான் நினைத்ததை விட அதிகம் தருவார்கள்,” என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதேபோல இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா, ” இந்தியா முதல் நாளில் 310 ரன்கள் எடுத்திருந்தாலும் வெற்றி இங்கிலாந்தின் பக்கமே சாய்ந்திருக்கிறது.

பும்ராவிடம் பயிற்சியாளர் உங்களை 3, 5வது டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்க நினைத்தோம். ஆனால் 3வது போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இடைவெளி இருக்கிறது. எனவே நீங்கள் 2வது,3வது போட்டிகளில் விளையாடுங்கள் என்று கூறியிருக்க வேண்டும். கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் நீங்கள் 7 தோல்விகளுடன் 1 வெற்றி 1 டிராவை சந்தித்துள்ளீர்கள்,” என்று விளாசி இருக்கிறார்.

இந்திய அணி தேர்வினை முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், போட்டிக்கு முன் நேரலையில் கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news