கடந்த ஆறு மாதங்களில் மட்டும் உலகளாவிய நாடுகள் மற்றும் வர்த்தக அளவிலான முக்கிய நட்பு நாடுகளின் கரன்சிக்கு எதிரான டாலர் மதிப்பு, 10 சதவீதத்துக்கு மேல் சரிந்தித்திருக்கிறது. இதற்கு முன்பு இந்த அளவு வீழ்ச்சி, கடந்த 1973ம் ஆண்டில் தான் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், உறுதியற்ற வரி விதிப்புகள், வரிகளில் மாற்றங்கள், அதிக உற்பத்தி திறனுடைய நாடுகளுடன் சர்ச்சை என்று அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் டாலர் மதிப்பின் இந்த நிலையற்ற தன்மைக்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
கையை கடிக்கும் அமெரிக்க வரி விதிப்பு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாட்டு முதலீடுகள் அமெரிக்காவில் குறைந்து வருகின்றன. இதன் காரணமாக அரசு முன்பு எப்போதும் இல்லாத அளவில் அதிக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. டிரம்பின் வர்த்தக திட்டங்கள், பணவீக்க அச்சுறுத்தல்கள், அதிகரிக்கும் அரசின் கடன் ஆகியவை அமெரிக்க டாலரின் மதிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, வரி விதிப்புகளை அவ்வப்போது நிறுத்தி வைப்பதும் நாள் தோறும் மாற்றி அறிவிப்பதும், முதலீட்டாளர்கள் மற்றும் கரன்சி வர்த்தகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனாலேயே டாலர் மதிப்பு சரிவதாக கூறப்படுகிறது. டிரம்ப் அதிபராக பதவியேற்ற உடன் டாலர் மதிப்பு சரசரவென அதிகரித்தது. தொடர்ந்து பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி, கடன் வட்டி உயர்வு, அதிக பணவீக்கம் ஆகியவற்றால் தளர்ந்திருந்த முதலீட்டாளர்களை, டிரம்ப் விதித்த கடுமையான வரிகள் திக்குமுக்காட வைத்துவிட்டன.
பொருளாதார நிபுணர்கள், முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள் என எந்த பிரிவினரும் கணிக்க முடியாத அளவில் வரி விதிப்பு இருந்ததால், அமெரிக்க சந்தைகளில் பங்குகள், பத்திரங்கள் முதல் டாலர் வணிகம் வரை அச்சம் ஏற்பட்டது. இதன் விளைவாக டாலர் மதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலரின் இந்த சரிவால், இந்திய ரூபாய் வலுப்பெற்று நிலைத்தன்மையுடன் வணிகமாவது நமக்கு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.