திருப்புவனம் அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித்குமார் மீது திருட்டு புகார் அளித்து இந்த சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர் நிகிதா.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா தன்னுடைய 10 சவரன் நகைகளை காணவில்லை. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது சந்தேகமாக இருக்கிறது என திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறப்பு காவலர்கள் அஜித்குமார் மீது கொடூரமான வன்முறையை அரங்கேற்றி அவர் இறப்புக்கு காரணமாகினர்.
இந்தநிலையில் புகார் அளித்த நிகிதா மீது ஏகப்பட்ட மோசடி வழக்குகள், நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசில் தெரிவித்தது போல இவர் மருத்துவர் கிடையாது. PHD முடித்து அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்தவராம். தற்போது இவரின் அதிர்ச்சி பின்னணி குறித்து தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த, ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஜெயபெருமாள் அவரின் மனைவி சிவகாமி அம்மாள் ஆகியோரின் மகள் தான் இந்த நிகிதா. கடந்த 2010ம் ஆண்டு தங்களுக்கு அரசு பிரமுகரை தெரியும், அரசு வேலை வாங்கி தருகிறோம் என்று ரூபாய் 16 லட்சம் வரை பணம் வாங்கிக்கொண்டு சிலரை ஏமாற்றி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஜெயபெருமாள், நிகிதா, சிவகாமி அம்மாள் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் 2011ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் நிகிதா, ஜெயபெருமாள் இருவரும் கைது செய்யப்பட்டனர். நிகிதா இந்த வழக்கில் ஜாமீன் பெயில் வாங்கி வெளியில் வந்து விட்டார். அவரது தந்தை சிறைக்கு சென்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இதேபோல் செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்த ஒருவரிடமும், அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 25 லட்சம் வாங்கிக்கொண்டு நிகிதா, சிவகாமி அம்மாள் இருவரும் ஏமாற்றியதாக மற்றொரு வழக்கும் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறதாம்.
வேலை வாங்கித் தராமல் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய நிகிதா, பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. அத்துடன் திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்த சிலரிடமும் அரசு வேலை வாங்கித்தருவதாக, பல லட்சம் ரூபாய் மோசடி செய்து அது தொடர்பாகவும் 2011ல், நிகிதா மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நிகிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தவிர, கடந்த ஜனவரியில் திருமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி தாளாளரிடமும் தனது வீட்டை அவரிடம் விற்பதற்கான முன்பணமாக 30 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக, ஒரு புகாரும் அவர் மீது அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பணமோசடி வழக்குகள் இருந்தும் நிகிதா சுதந்திரமாக எப்படி வெளியில் சுற்றித் திரிந்தார்? அஜித்குமார் மீது நிகிதா கொடுத்த புகார் உண்மையானது தானா?
மோசடியின் மொத்த உருவமாக திகழும் நிகிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்குமார் உயிரிழந்தது நியாயமா? என இந்த வழக்கில் எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன.
திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் நிகிதா பேராசிரியையாக பணியாற்றி வந்ததாக தெரிகிறது. அவர்கள் வாசித்த வீடு தற்போது பூட்டி கிடக்கிறது. இருவரும் எங்கு சென்றார்கள்? என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நிகிதாவை கைது செய்து, அஜித்குமார் வழக்கில் உண்மையில் என்ன நடந்தது? என்னும் உண்மையை போலீசார் வெளிக்கொணர வேண்டும் என அஜித்குமாரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.