ஜூலை மாதம் வானில் நிறைய அருமையான நிகழ்வுகள் நடக்கப் போகிறது. இந்த மாதம் வானில் புதன் கிரகம், முழு நிலவு, மற்றும் பிரபலமான விண்மீன் மழை போன்ற சில அரிய காட்சிகளை பார்க்க முடியும்.
ஜூலை 4ஆம் தேதி, சூரியனுக்கு மிக அருகிலிருக்கும் புதன் கிரகம் (Mercury), அதன் மிகப்பெரிய கிழக்கு நீட்சியை அடைகிறது.
அதாவது, சூரியனிடமிருந்து அதிகத் தூரத்தில் விலகி, வானில் தெளிவாகத் தோன்றும்.
இது ஒரு அரிய தருணம் என்பதால், அந்த மாலை, சூரியன் மறைந்த பிறகு மேற்கு வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம், “Swift Planet” என அழைக்கப்படும் இந்த கிரகத்தை காணலாம். இது சுமார் வினாடிக்கு 29 மைல்கள் எனும் அதிரடி வேகத்தில் பயணிக்கும். மேலும் இது சூரிய குடும்பத்தில் உள்ள மிக வேகமான கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஜூலை 10ஆம் தேதி, முழு நிலவு வானில் திகழ்கிறது.
இந்த நிலவுக்கு “Buck Moon” எனப்படும் சிறப்பு பெயர் உள்ளது. அமெரிக்க பழங்குடி மக்களின் நம்பிக்கைப்படி, இந்த நேரம் ஆண் மான்கள் (Bucks) தங்களது கொம்புகளை வளர்த்துக்கொள்ளும் காலமாக இருப்பதால், இந்த நிலவுக்கு அந்தப் பெயர் வந்துள்ளது.
இந்த நிலவைத் தொலைநோக்கியின் உதவியுடன் பார்த்தால், அதன் மேற்பரப்பில் உள்ள பிரகாசமான பள்ளங்கள் மற்றும் இருண்ட பசால்ட் என்னும் சமவெளிகள் நமக்குத் தெளிவாக தெரியும்.
இறுதியாக ஜூலை 29 மற்றும் 30 இரவுகளில், Southern Delta Aquariids எனப்படும் விண்மீன் மழை தனது உச்ச நிலையில் காணப்படும். இந்த விண்மீன்கள் அடிக்கடி மங்கலான ஒளியோடு இருப்பதால், தெளிந்த இருட்டான வானில் மட்டுமே நன்றாகக் காண முடியும்.
இந்த ஆண்டில், வளர்பிறை நிலவு அதிகாலையில் மறையக்கூடிய நேரத்தில் இருப்பதால், காலை நேரம் இந்த விண்மீன் மழையை பார்ப்பதற்குச் சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வுகள், தென்னிந்தியா, அமெரிக்காவின் தென் பகுதி போன்ற இடங்களில் நன்றாகக் காணப்படும்.
ஜூலை 20ஆம் தேதி, சூரிய உதயத்திற்கு முன், நிலவையும் “ஏழு சகோதரிகள்” என அழைக்கப்படும் பிளேயட்ஸ் நட்சத்திரக் கூட்டத்தையும் வானில் அருகருகே காண முடியும். இது ஒரு அழகான காட்சி. வெறும் கண்களால் பார்த்தாலும் சிறப்பாகத் தெரியும்; தொலைநோக்கி இருந்தால் இன்னும் தெளிவாகக் காணலாம்.
மொத்தத்தில், ஜூலை மாதம் முழுவதும் வானத்தைச் சிறிது நேரம் நோக்கினால், இயற்கையின் மொத்த அழகையும் நம்மால் நேரில் பார்த்து ரசிக்க முடியும்.