நாடாளுமன்றத்தில் அத்து மீறி நுழைந்து, போராட்டம் நடத்திய 2 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் வண்ண புகையை உமிழும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல் நாடாளுமன்றத்திற்கு வெளியே மேலும் இருவர் வண்ணப் புகையை உமிழும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, டெல்லி போலீசாரால் சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம் ஆசாத் , அமோல் ஷிண்டே உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், குற்றத்திற்கு உதவிய மகேஷ் குமாவத், லலித் ஜா என்ற இருவர் உட்பட மொத்தம் 6 பேர் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு டெல்லியில் உள்ள வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் உள்ளிட்ட இருவரும் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகிய நிலையில் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் மறுத்தது. இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தலா 50 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகையுடன் ஜாமீன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருவரும் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் பேசவோ அல்லது அறிக்கைகள் வெளியிடவும் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், டெல்லியை விட்டு இருவரும் வெளியேறக்கூடாது என்றும் வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புலனாய்வு அமைப்பு முன் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்தனர்.