Thursday, July 3, 2025

‘Brahmos’ காட்டிலும் பலமடங்கு கொடியது : வல்லரசு நாடுகளுக்கு ‘ஆட்டம்’ காட்டும் India

ரஷ்யா – உக்ரைன், ஈரான் – இஸ்ரேல் நாடுகளின் போரால் தங்களின் ஆயுத பலத்தை மேம்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் இந்தியா சக்திவாய்ந்த K – 6 ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை உருவாக்கி, வல்லரசு நாடுகளுக்கு ஆட்டம் காட்டியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஒருநாட்டின் பலம், அதன் ராணுவ வலிமையை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட ஆயுதங்களுக்கு என, தங்களின் பட்ஜெட்டில் மிகப்பெரும் தொகையை ஒதுக்குகின்றன. அந்தவகையில் உலகின் மிகப்பெரும் ராணுவத்தை கொண்டிருக்கும் 4வது நாடான இந்தியா, தற்போது புதிய ஏவுகணை ஒன்றை உருவாக்கி அதை சோதித்து பார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

இந்தியா உருவாக்கி இருக்கும் அந்த ஏவுகணையின் பெயர் K- 6 ஹைப்பர்சோனிக். ஹைதராபாத்தின் DRDO அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு இதை உருவாக்கி வருகிறது. S-5 அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இந்த ஏவுகணை பயன்படுத்தப்படலாம். இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை காட்டிலும் பன்மடங்கு திறன் வாய்ந்தது என்பதால் இந்தியாவை அவ்வப்போது சீண்டும் சீனா, பாகிஸ்தான் நாடுகளை எதிர்க்க இந்தியா இந்த ஏவுகணையை பயன்படுத்தலாம்.

இது தற்போது கடற்படை அமைப்புகள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை, உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்கும் திறன் படைத்தது. K-6 ஏவுகணை ஏவப்படும் S-5 வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், தற்போதுள்ள அரிஹந்த் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை விட, பெரியதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.

கனரக போர்முனைகள் மற்றும் ஏவுகணைகளை சுமந்து செல்லும் வகையில், அவை உருவாக்கப்பட்டு வருகின்றன. சோதனை முடிந்து பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் மேம்பட்ட மற்றும் ஆபத்தான ஏவுகணைகளில் ஒன்றாக இது இருக்கும். மணிக்கு 9 ஆயிரத்து 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்பதால், என்ன நடக்கிறது? என எதிரிகள் உணர்வதற்குள், இது இலக்குகளை தாக்கி அழித்திருக்கும்.

MIRV எனப்படும் அதிவேக தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால், ஒரு ஏவுகணை பல இலக்குகளைத் தாக்குவதற்கு அனுமதிக்கிறது. தற்போது அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே, மேம்பட்ட ஹைப்பர்சோனிக் மற்றும் MIRV பொருத்தப்பட்ட ஏவுகணை அமைப்புகள் இருக்கின்றன. எனவே K- 6 ஹைப்பர்சோனிக் ஏவுகணை முயற்சியை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்து விட்டால், மேற்கண்ட வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news