Thursday, July 3, 2025

கொஞ்ச நஞ்ச ‘ஆட்டமா’ ஆடுனீங்க? சொந்த காசில் ‘சூனியம்’ வைத்துக்கொண்ட துருக்கி

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தின்போது பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக அஜர்பைஜான், துருக்கி நாடுகள் களமிறங்கி நேரடி ஆதரவை வழங்கின. இதனால் துருக்கி, அஜர்பைஜான் நாட்டு பொருட்களை புறக்கணித்தும், அந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை நிறுத்தியும் இந்தியர்கள் தங்களது எதிர்ப்பை காட்டினர். இதன் காரணமாக அந்நாடுகளின் பொருளாதாரம் பலத்த அடிவாங்கியது.

இந்தநிலையில் துருக்கி மீண்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி, ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கடந்த 2017ம் ஆண்டு இரண்டு S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை துருக்கி வாங்கியது. S- 400 என்பது ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பாகும்.

இது வான்வழி அச்சுறுத்தல்களான போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த அமைப்பு நீண்ட தூர இலக்குகளைத் தாக்குவதற்கும், பல்வேறு வகையான இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்த S- 400 ஐ வாங்கியதால், அமெரிக்காவின் F-35 போர் விமானத் திட்டத்தில் இருந்து துருக்கி விலக்கப்பட்டது.

தற்போது அமெரிக்காவுடன் இணைய துருக்கி ஆசைப்படுகிறது. இதனால் தங்களிடம் இருக்கும் இரண்டு  S-400 பாதுகாப்பு அமைப்புகளையும் பாகிஸ்தானிற்கு விற்க திட்டமிட்டு வருகிறதாம். ஆனால் இதில் துருக்கிக்கு இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் ரஷ்யா தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானிற்கு விற்கப்படுவதை விரும்பாது.

இரண்டாவதாக ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பை, துருக்கியிடம் இருந்து வாங்கும் அளவுக்கு பாகிஸ்தானிடம் போதுமான பணம் இல்லை. அத்துடன் இவற்றை விற்பதற்கு ரஷ்யாவின் சம்மதமும் அவசியம். இந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிடம் ஏற்கனவே இருக்கின்றன. என்றாலும் இந்தியாவின் நிதிநிலைமை நன்றாக இருப்பதால், இவற்றை துருகியிடம் இருந்து வாங்குவது பெரிய விஷயமில்லை. ஆனால் முந்திரிக்கொட்டை தனமாக துருக்கி, இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தின்போது பாகிஸ்தானிற்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் நேரடி எதிரியாக மாறியது. இதனால் துருக்கியின் எதிரி நாடுகளான சைப்ரஸ், கிரீஸ் நாடுகளுடன் ராணுவ உறவினை வளர்க்க, இந்தியா தற்போது ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய ராணுவப்படை தளபதி கிரீஸ் நாட்டுக்கு சென்றது, மற்றும் சைப்ரஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது எல்லாம் இதற்காகத்தான். 

மொத்தத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டதால், 250 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட 2 S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை விற்கவோ, பயன்படுத்தவோ வழியின்றி துருக்கி தற்போது கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இதற்கிடையே தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த, ‘Steel Dome’ என்ற புதிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை துருக்கி, உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news