Tuesday, July 1, 2025

”அந்த 2 பேரை விட்டு கொடுங்க” GT வீரர்களுக்கு வலைவீசும் CSK?

18வது IPL தொடரில் பலத்த அடிவாங்கியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக Trading வேலைகளில் இறங்கியுள்ளது. முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு வலைவீசிய சென்னை அதில் வெற்றியும் கண்டுவிட்டதாக தெரிகிறது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் விரைவில் சென்னை அணியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பதிலுக்கு சென்னையில் இருந்து அஸ்வின், சிவம் துபே இருவரும் ராஜஸ்தானுக்கு போகலாம் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணியில், 2 வீரர்களுக்கு CSK ஸ்கெட்ச் போட்டு வருவதாக தகவல்கள் அடிபட்டு வருகின்றன. தமிழக வீரரும் ஆல்ரவுண்டருமான வாஷிங்டன் சுந்தர், மற்றும் அதிரடி பினிஷர் ராகுல் தேவட்டியா இருவரும் தான் அந்த வீரர்களாம்.

சுந்தர் 4 கோடி ரூபாய்க்கும், ராகுல் 3 கோடியே 20 லட்சத்துக்கும் அந்த அணியால் தக்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்கு பதிலாக 6 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டெவன் கான்வேவை குஜராத்திற்கு அனுப்ப சென்னை முடிவு செய்து இருக்கிறதாம்.

இந்த Trading நல்லபடியாக முடிந்தால் கான்வே மட்டுமின்றி, கையில் இருந்தும் ரூபாய் 95 லட்சத்தை CSK, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கொடுக்க வேண்டியது இருக்கும். ஒரு வீரருக்கு பதிலாக இரண்டு ஆல்ரவுண்டர்கள் கிடைப்பதால், இந்த டீலுக்கு சென்னை ஓகே சொல்லிட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

அத்துடன் சுந்தர் அணிக்குள் வந்தால், தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்னும் நீண்டகால சர்ச்சைக்கும், முற்றுப்புள்ளி வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட CSK திட்டம் தீட்டுகிறதாம். இதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து பாதியில் கழண்டு சென்ற, கிளென் மேக்ஸ்வெல் மீதும் சென்னை ஒரு கண்ணை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news