இன்றைய நவீன உலகத்தில் எல்லாமே காசு தான். சமூக வலைதளங்களின் அதீத வளர்ச்சியால் 1000 பாலோயர்கள் வைத்திருக்கும் நபர் கூட, விளம்பரத்தின் மூலம் காசு பார்க்கும் காலமிது. நிலைமை இப்படியிருக்க உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வெப்சைட் எந்தவித விளம்பரமோ, சந்தாவோ இன்றி இயங்கி வருவது உலகின் 8வது அதிசயமாகத் தான் பார்க்கப்படுகிறது.
நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த Wikipedia தளம் தான் அது. ஆரம்பத்தில் விளம்பரங்களுடன் உலா வந்த Wikipedia நாளடைவில் எந்தவித விளம்பரமும் இன்றி, பயனர்களுக்கு தேவையான தகவல்களை மட்டும் அளிக்கும் தளமாக உருமாறியது. இந்த முடிவை எடுப்பதற்கான காரணம் அதன் பின்னணி குறித்து, Wikipedia நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் பேட்டி ஒன்றில் மனந்திறந்து பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர், ” சிறுவனாக இருந்தபோது எனக்கு புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும். என்னுடைய அம்மா இதற்காக Encyclopedia புத்தகங்களை வாங்கி கொடுப்பார். அந்த புத்தகங்கள் வருடந்தோறும் புதிய தகவல்களுடன் Update செய்யப்படும். ஆனால் அதிலும் சில தகவல்கள் விடுபட்டு போயின. இது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயமாக இருந்தது. 20 வருடங்கள் கழித்து இன்டர்நெட் பயன்பாட்டுக்கு வந்தது.
அப்போது இந்த தகவல்களை ஏன் இணையத்தில் கிடைக்கும்படி செய்யக்கூடாது என்று நினைத்தேன். Wikipedia உருவானது இப்படித்தான். Wiki என்பது Hawalian வார்த்தை ஆகும். இதற்கு மிக விரைவாக என்பது அர்த்தம். Encyclopediaவில் இருந்து Pedia என்பதை எடுத்துக் கொண்டேன். ஆரம்பத்தில் எழுத்தாளர்களுக்கு பணம் கொடுப்பது, தளத்தில் விளம்பரங்கள் செய்வது என பத்தோடு பதினொன்றாக தான் Wikipedia இருந்தது.
ஒருகட்டத்தில் Wikipedia 100 சதவீதம் இலவசம் என்று முடிவெடுத்த ஜிம்மி வேல்ஸ், அதை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டார். அன்றில் இருந்து இன்றுவரை Wikipedia இலவசமாக அனைத்து தகவல்களையும் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இதுகுறித்து வேல்ஸ் ‘நான் எடுத்ததிலேயே சிறந்த முடிவு இதுதான்’ என்று பெருமிதமாக தெரிவிக்கிறார். 10 வயது சிறுவனோ 80 வயது முதியவரோ, அனைவருக்கும் தகவல்கள் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பது தான் ஜிம்மியின் விருப்பம்.
உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை Wikipediaவில் இலவசமாக பதிவிடுகின்றனர். அனைவரும் இணைந்து பணியாற்றி, பயனர்களுக்கு சரியான தகவல்களை அளிக்கின்றனர் . ஜிம்மி வேல்ஸின் இந்த முடிவால் 300 மொழிகளில், 50 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், Wikipediaவில் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
விளம்பரங்கள், தளத்திற்கு வருபவர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஆகிய விஷயங்களை செய்திருந்தால், இன்று உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக ஜிம்மி வேல்ஸ் மாறியிருப்பார். ஆனால் எங்கோ இருக்கும் ஒரு ஏழை மாணவனுக்கும் தகவல்கள் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, முற்றிலும் இலவசமாக இந்த தளத்தை அவர் நடத்தி வருகிறார்.
தற்போது லண்டனில் வசிக்கும் ஜிம்மி வேல்ஸ், ”நினைத்த விஷயங்களை செய்கிறேன். எங்கு சென்றாலும் உலக தலைவர்களை சந்தித்து உரையாடுகிறேன். பணத்தை விடவும் இதுபோன்ற விஷயங்கள் சிறப்பாக உள்ளன,” என்கிறார். உலகின் மிகப்பெரிய 6வது வெப்சைட்டாக இருக்கும் Wikipedia முழுக்க, நன்கொடையால் மட்டுமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.