ஈரான் எடுத்த முக்கிய முடிவு! பதறும் உலக நாடுகள்! இந்தியாவை பாதிக்குமா?

தற்போது மத்திய கிழக்கு நிலவரம் மிகுந்த பதட்டத்தில் உள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், உலக அளவில் கவலையை ஏற்படுத்திய செய்தி ஒன்று… ஹார்மூஸ் ஜலசந்தியை மூடலாம் என ஈரான் பரிசீலனை நடத்தி வருகிறது.

இந்த ஹார்மூஸ் ஜலசந்தி என்பது சாதாரண ஒரு கடல்வழிப் பாதை அல்ல. இது உலக எரிசக்தி போக்குவரத்தின் இதயமாக கருதப்படுகிறது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இங்கு வழியாகத்தான் போகிறது. இந்த வழி மூடப்பட்டால், உலக பொருளாதாரம் திடீரென அச்சுறுத்தப்படலாம்.

இஸ்ரேல் – ஈரான் மோதல் உச்சத்தைத் தொடும் நிலையில், இந்தியாவும் இதில் பாதிக்கப்படக் கூடும் என்பதற்கான அச்சம் நிலவுகிறது. ஏனெனில், இந்தியா வளைகுடா நாடுகளைப் பெரிதும் நம்பி எண்ணெய் இறக்குமதி செய்கிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்திய மத்திய கிழக்கு நிலவரத்தை நாங்கள் மிக நுணுக்கமாக கவனித்து வருகிறோம். பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த சில வருடங்களாக நாங்கள் எங்கள் எண்ணெய் விநியோகத்தை பன்முகப்படுத்தியுள்ளோம். அதனால், பெரும்பாலான விநியோகம் ஹார்மூஸ் வழியாக இல்லை.” என்றும்,

மேலும், நம்முடைய எண்ணெய் நிறுவனங்களிடம் பல வாரங்களுக்கு தேவையான இருப்பும் உள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்தும் நாங்கள் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். நாளொன்றுக்கு 22 லட்சம் பீப்பாய் எண்ணெய் ரஷ்யாவிலிருந்து வாங்க திட்டமிட்டு இருக்கிறோம்.

ஹார்மூஸ் மூடப்பட்டாலும், நமது எண்ணெய் விநியோகம் இடைஞ்சலின்றி நடந்தேறும் என்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது. ஆனால் உலக சந்தை விலைகள் உயரும் அபாயம் தொடர்கிறது.

33 கி.மீ அகலமுள்ள இந்த ஜலசந்தி மூடப்பட்டால், ஒரு வாரமே போதுமானது – உலகம் முழுக்க எண்ணெய் பஞ்சம் ஏற்படும். ஆனால் இந்தியா தயாராகவே உள்ளது. பன்முக மூலங்கள், ஏற்கனவே உருவாக்கப்பட்டிருப்பது நம்மை ஒரு பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஆனாலும், இந்த சூழ்நிலையை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.

Related News

Latest News