Saturday, June 21, 2025

இஸ்ரேலின் பொருளாதார நெருக்கடி! இந்தியாவுக்கு வரும் பேராபத்து!

இஸ்ரேலும் ஈரானும் நடத்திய போர்… தற்போது வெறும் இராணுவ மோதலாக அல்ல, இரு நாடுகளுக்கும் மிகப் பெரிய செலவாகவும், பொருளாதார சுமையாகவும் மாறிவிட்டது. ஆனால் இதில் பணத்தை தண்ணீரைப் போல செலவழிக்கிற நாடு இஸ்ரேல் தான். இப்போது ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளுக்காக சுமார் 725 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 6,300 கோடி ரூபாய் வரை செலவழிக்கிறது.

போர் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 12,000 கோடிக்கு மேல் இஸ்ரேல் செலவழித்துள்ளது என முன்னாள் ராணுவ நிதி ஆலோசகர் ரீம் அமினாஸ் தெரிவித்துள்ளார். இதில், விமானத் தாக்குதல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், ஏவுகணைகள், வீரர்கள்—என எல்லாமே அடங்கும்.

முக்கியமாக, 500 மில்லியன் டாலர் வரை விமான எரிபொருள், விமானம் இயக்கம் மற்றும் வான்வழி தாக்குதல்களுக்கு மட்டும் செலவழிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள தொகை Iron Dome போன்ற இடைமறிப்பு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் தயார் பணிகளுக்காக செலவிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது !

இஸ்ரேல் ஈரானை தாக்கியபோது பயன்படுத்திய விமானங்களுக்கும் ஆயுதங்களுக்கும் மட்டும் 593 மில்லியன் டாலர் செலவாகியுள்ளன. ஆனால் இது நேரடிச் செலவுதான். உண்மையான பின் விளைவுகள் இன்னும் கணக்கில் வரவில்லை.

போர் காரணமாக, மக்கள் சொத்து இழப்புகள், தொழில் தடை, உள்நாட்டு உற்பத்தியில் சரிவு — இவை அனைத்தும் சேரும்போது தான் உண்மையான சேதம் தெரியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இஸ்ரேலின் நிதி அமைச்சகம் கூட 2025-இல் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை 4.3% லிருந்து 3.6% ஆக குறைத்துவிட்டது. மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் பரிசோதனைக்குள்ளாகி வருகின்றன. Iron Dome-ஐ இயக்கப் போதுமான ஏவுகணைகள் இன்னும் 10–12 நாட்களுக்கு மட்டும் தான் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த மோதல் உலக சந்தையையும் தாக்கி வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டது. ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு விலை USD 65-லிருந்து 75 வரை போயிருக்கிறது.

இதன் தாக்கம் இந்தியா மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், இந்தியா பெரும்பாலும் எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. பீப்பாய்க்கு 10 டாலர் கூட அதிகமானாலே, இந்தியா 13-14 பில்லியன் டாலர்கள் கூடுதல் செலவு செய்ய நேரிடும். இதனால், நம் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை – CAD – 0.3% வரை அதிகரிக்கக்கூடும். அதுவே நம் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய சுமையாக மாறும்.

இஸ்ரேல்-ஈரான் போர்… ராணுவத்துக்கு மட்டுமல்ல, பொருளாதாரத்துக்கும் ஒரு பின்விளைவுகளால் நிறைந்த தாக்குதலாகவே இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news