Thursday, July 31, 2025

காவல்நிலையத்தை தாக்கியவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வே.சத்திரப்பட்டியில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற முக்கிய கொலையில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது தந்தை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், மது போதையில் காவல் நிலையத்தை சூறையாடி தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் காவல்நிலையத்தை தாக்கியவர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

இன்று (14.06.2025) அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மதுரை மாவட்டம், V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலர் பால்பாண்டி (HC 300) என்பவர் பாரா பணியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத இருவர் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த மேற்படி தலைமை காவலர் பால் பாண்டியுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டதோடு, காவல் நிலையத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

விசாரணையில், அந்நபர்கள் மதுரை மாவட்டம், V.சத்திரப்பட்டியை சேர்ந்த முத்துவேல் என்பவரது மகன் பிரபாகரன் (எ) போராளி பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், மேற்படி பிரபாகரன் என்பவருடைய தந்தை முத்துவேல் என்பவரை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றதாக தவறாக கருதி அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் போராளி பிரபாகரன் தன்னுடைய நண்பரை அழைத்து வந்து காவல் நிலையத்தில் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

தலைமறைவாக உள்ள மேற்படி இரு நபர்களையும் கைது செய்ய உசிலம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு பேரையூர் உட்கோட்டம்) தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News