Tuesday, May 20, 2025

சிபிஐ எனக் கூறி மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீரா உசேன் (82). மருத்துவரான இவர், அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவரது செல்போனுக்கு வீடியோ கால் அழைப்பு வந்துள்ளது.

அந்த அழைப்பில் பேசிய நபர் தன்னை மும்பை சிபிஐ போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டு, ‘‘உங்கள் மீது போதைப் பொருள் கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளோம். உங்களது ஆதார், பான்கார்டு எண்களை அனுப்புங்கள்” என தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக நீங்கள் ரூ.2 கோடி பணத்தை நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால், நாங்கள் நேரில் வந்து உங்களை கைது செய்ய நேரிடும் என்று கூறியுள்ளார்.

இதனால் பயந்த மீரா உசேன், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 கோடியே 19 லட்சத்து 20 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். இது குறித்து திருவாரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் மே 14ம் தேதி புகார் அளித்தார்.

அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த ஜாகிர் உசேன்(25), பெனட்ரிக் ராஜா(27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

Latest news