Tuesday, August 19, 2025
HTML tutorial

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு : தவெக தலைவர் விஜய் வரவேற்பு

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக
இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News