Sunday, May 11, 2025

பாகிஸ்தானுக்கு பாடம் ‘புகட்டிய’ இந்தியாவின் ‘சுதர்சன’ சக்கரம் S400 சிறை பிடிக்கப்பட்டதா? ‘அதிர்ச்சி’ தகவல்!

அத்துமீறி வாலாட்டிய பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததில், இந்தியாவின் S 400 ஏவுகணைக்கு முக்கிய இடமுண்டு. ஆசிய கண்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே இந்த ஏவுகணை உள்ளது. 2018ம் ஆண்டு அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி 5 வகையான S 400 ஏவுகணைகளை, ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதன் மொத்த மதிப்பு சுமார் 35 ஆயிரம் கோடியாகும். இவற்றில் 3 ஏவுகணைகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள இரண்டும் 2026ம் ஆண்டுவாக்கில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. ரஷ்யாவில் உருவான இந்த S-400 என்பது, ஒரு நவீன நீண்ட தூர வான் கவச ஏவுகணை அமைப்பாகும்.

இதனால் 600 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிக்க முடியும். 400 கிலோமீட்டர் எல்லைக்குள் வரும் உளவு விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கண்டறிந்து அழிக்க முடியும். இந்த ஏவுகணைகள் மணிக்கு சுமார் 17,000 கிமீ வேகத்திலும், 10 மீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை உயரத்திலும் பறக்கும் இலக்குகளை சுக்குநூறாக்கும் திறன் கொண்டவை.

பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகளை முறியடித்த மொத்த பெருமையும், இந்த S – 400 ஏவுகணையே சேரும். இந்த நிலையில் இந்தியாவின் சுதர்சன சக்கரமாகத் திகழும், எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த செய்திகளில் சிறிதளவும் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவல் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகளால் திட்டமிட்டு பரப்பப்படும், பொய் செய்திகள் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல், இந்திய விமானப்படை பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் வதந்தி பரப்புவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, பெண் விமானி ஷிவானி சிங் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் போலியானது என்றும், விளக்கம் அளித்துள்ளது.

Latest news