Saturday, May 10, 2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ படத்திற்கு கடும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்ட இயக்குனர்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.

இருப்பினும் எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் உத்தம் மகேஷ்வரி என்பவர், தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று இரவு பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்றை எடுக்கப்போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

லாபத்திற்காக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை பயன்படுத்த கூடாது என்றும், இந்த சமயத்தில் இப்படி ஒரு படம் எடுப்பது தேவையற்றது என்றும் சிலர் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து இயக்குநர் உத்தம் மகேஷ்வரி, மன்னிப்பு கோரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் “யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. இந்த யோசனை நமது தேசத்தின் மீதான ஆழ்ந்த மரியாதை மற்றும் அன்பில் இருந்து பிறந்தது, புகழ் மற்றும் பணத்திற்காக அல்ல.

திரைப்படத்தை அறிவித்த நேரம் சிலருக்கு அசவுகரியத்தையோ அல்லது வலியையோ ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக, நான் மிகவும் வருந்துகிறேன்” என அவர் விளக்கமளித்துள்ளார்.

Latest news