பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியான இந்திய ராணுவ தாக்குதல் “ஆபரேஷன் சிந்தூரில்” மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அவருடைய 4 உதவியாளர்களின் மூச்சு அடங்கியது.
இந்திய ராணுவம் நேற்று அதிகாலை நடத்திய வான்வழி தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லா கட்டடம் தாக்குதலுக்குள்ளாகி தவிடுபொடியானது.
இதுகுறித்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் நேற்று, “இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் என்னுடைய மூத்த சகோதரி, அவருடைய கணவர், என் சகோதரர், 5 குழந்தைகள் உள்ளிட்ட என் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் என்னுடைய 4 உதவியாளர்கள் உயிரிழந்துவிட்டனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அல்லாவின் விருந்தினர் ஆகி விட்டனர்.
இதில் எனக்கு வருத்தமோ, விரக்தியோ இல்லை. மாறாக, இந்த 14 பேர் பயணித்த மகிழ்ச்சியான வாகனத்தில் நானும் இணைந்திருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் என் மனதில் தோன்றுகிறது. அவர்கள் புறப்படும் நேரம் வந்துவிட்டது என்றாலும் இறைவன் அவர்களை கொல்லவில்லை. அவர்களின் இறுதி அஞ்சலியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்று கூறியதை ஏற்று பாகிஸ்தான் ராணுவத்தினரும் அரசு நிர்வாகத்தினரும் பெரும் திரளாக சென்றிருந்தனர்.
1994ல் போலி அடையாள அட்டையுடன் காஷ்மீருக்கு வந்த மசூத் அசார் கைது செய்யப்பட்ட நிலையில் 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பயணிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தையில் மசூத் அசார் விடுவிக்கப்பட்டார்.
2020-ல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல், 2008-ல் நடந்த மும்பை தாக்குதல், 2016-ல் பதான்கோட் தாக்குதல், 2019-ல் புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டதையடுத்து அசாரை சர்வதேச குற்றவாளி என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.