உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர், பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான வாரன் பபெட், சமீபத்தில் நடைபெற்ற ஆண்டுக்கணக்குச் கூட்டத்தில் கலந்துகொண்டு பெரும் அதிர்வலை கிளப்பினார். 94 வயதான பபெட், இந்த கூட்டத்தில் தன்னுடைய ஓய்வை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அவருக்குப் பதிலாக கிரெக் ஏபல் புதிய சிஇஓவாக நியமிக்கப்படுகிறார். ஆனால் இதைவிட பெரும் அதிர்ச்சியாக இருந்தது – பபெட் கொடுத்த பயமுறுத்தும் எச்சரிக்கைகள்! அவர் நேரடியாக டிரம்ப் பெயரைச் சொல்லவில்லை. ஆனால், அவர் செய்த விமர்சனங்களை யாரும் தவறாக புரிந்து கொள்ள முடியாது.
“ஒரு கரன்சி நரகத்துக்கே போய்க்கொண்டிருப்பதைக் கண்டால்… நிச்சயமாக அதை நம்மால் வைத்திருக்க முடியாது,” என்ற அவர், அமெரிக்க டாலரின் நிலைத்தன்மை குறித்த தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். “இந்த நிலை தொடர்ந்து நடந்தால், பல உலக நாடுகள் வேறு கரன்சி நோக்கிச் செல்லும். நாமே கூட யோசிக்க வேண்டிய நிலை வரும்!” என்றார்.
அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, நிர்வாக திறனின்மை, பெருகும் வர்த்தகப் பற்றாக்குறை—இவை அனைத்தும் அவரை கவலையடைய வைத்துள்ளன. அதே சமயம், “அமெரிக்கா இன்னும் உலகில் முதலீடு செய்ய சிறந்த நாடாகவே இருக்கிறது” என நம்பிக்கையோடு சொன்னார்.
டிரம்ப் நிர்வாகத்தின் வரி கொள்கைகள், வர்த்தகத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது, நாடுகளுக்கு எதிராக வரிகளை விதிப்பது—இவை அனைத்தும் பெரிய தவறுகள் என்று பபெட் கடுமையாகச் விமர்சித்திருக்கிறார் .
இவையெல்லாம் சொல்லிக் கொண்டே அவர் ஒரு முக்கியமான வார்த்தையைச் சொல்கிறார் – “நம் நட்பு நாடுகளை நாமே பகைத்துக்கொள்ளக்கூடாது. அது புத்திசாலித்தனம் அல்ல.”
அமெரிக்கா 250 ஆண்டுகளுக்கு முன்பு எதுவுமில்லாத நிலைமையில் இருந்தது. இன்று உலகத்தை ஓட்டும் சக்தியாக மாறியுள்ளது. ஆனால், அதன் நிலையை இழக்கக்கூடிய அபாயத்துக்குள் நாமே நம்மை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே பபெட் கூறும் உண்மை!
அமெரிக்காவின் பொருளாதாரம் மீது நம்பிக்கை இருந்தாலும், அதனுடைய கரன்சி மீது சந்தேகம் எழுவது ஒரு பெரிய எச்சரிக்கையாகத் தான் இருக்கிறது.