Saturday, May 3, 2025

வாகா எல்லையை அடைத்த பாகிஸ்தான்! சொந்த நாட்டு மக்களையே கைக்கழுவும் அவலம்! என்ன நடக்கிறது எல்லையில்?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பிற்பகல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி மக்களின் உயிர் காவு வாங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பாகிஸ்தான் உடனான ஒப்பந்தங்கள் மத்திய அரசால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. அந்தவகையில் இரு நாட்டு எல்லை அடைப்பு, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா அள்ளி வீசியது. இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.

மேலும் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இரண்டு நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்தியா உத்தரவிட்டிருந்தபோதிலும் குறுகிய காலக் கெடு விதிக்கப்பட்டதால் அனைத்துப் பாகிஸ்தானியர்களாலும் வெளியேற முடியவில்லை. மருத்துவ சிகிச்சை, கல்வி என பல தேவைகளுக்காக இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியில் தங்களது நாடு திரும்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா மனிதாபிமான அடிப்படியில் கால அவகாசத்தையும் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், தங்கள் சொந்த நாட்டினரை பற்றி கொஞ்சமும் அக்கறைகொள்ளாமல் அட்டாரி வாகா எல்லையை நேற்றைய தினம் திடீரென மூடியுள்ளது பாகிஸ்தான். எல்லையில், இந்தியாவில் வசித்த பாகிஸ்தானிய குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், “தயவுசெய்து எல்லையைக் கடக்க அனுமதிக்க சொல்லுங்கள். நான் என் குழந்தைகளிடம் செல்ல வேண்டும். என்னுடைய குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள். பெற்றோரைக் குழந்தைகள் பிரிய வேண்டும் என எந்தச் சட்டம் சொல்கிறது? எனது குழந்தைகள் அங்கு அழுது கொண்டிருப்பதால் நான் அங்கே செல்ல வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Latest news