இந்திய மக்களின் பண பரிவர்த்தனையில் முக்கிய இடத்தினை UPI வகிக்கிறது. பயன்படுத்த எளிதாக இருப்பதால் பாமர மக்களும் இதை விரும்பி பயன்படுத்துகின்றனர். என்றாலும் அவ்வப்போது UPI செயலிழந்து விடுகிறது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் UPI முடங்கலாம் என்று, பயனர்கள் ஒருவித அச்சத்துடனேயே சுற்றித் திரிகின்றனர். இந்தநிலையில் பயனர்களின் வருத்தத்தினை போக்கும் வகையில், NPCI முக்கிய மாற்றம் ஒன்றினை பண பரிவர்த்தனையில் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
அதன்படி ஜூன் 16ம் முதல் UPI யூசர்கள் ஒரு பரிவர்த்தனையின் நிலையைச் சரிபார்ப்பது அல்லது அதை ரிவர்ஸ் செய்யும் செயல்முறை வேகமானதாக மாறும். பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்கும் நேரம் 30 வினாடிகளில் இருந்து, 10 வினாடிகளாகக் குறைக்கப்படுகிறது.
அதேபோல UPI பேமெண்ட்டை யாராவது ரிவர்ஸ் செய்ய விரும்பினால், அதற்கான ரெஸ்பான்ஸ் டைமும் 30 வினாடிகளுக்குப் பதிலாக 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. பணத்தை அனுப்புதல் அல்லது பெறுவதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும், 30 வினாடிகளில் இருந்து 15 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பயனர்கள் தங்களது UPI ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும், 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி நீங்கள் பணம் அனுப்புவது, பணம் பெறுவது, பரிவர்த்தனை சரிபார்ப்பது என்று,அனைத்துமே மின்னல் வேகத்தில் நடைபெறும்.
இதற்கு ஏற்றவாறு வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்கள் தங்களது சிஸ்டத்தை மேம்படுத்துமாறு, NPCI சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் ரெஸ்பான்ஸ் நேரம் குறைக்கப்பட்டாலும், பண பரிவர்த்தனைகளின் சக்ஸஸ் ரேட் பாதிக்கப்படக் கூடாது என்றும் NPCI சுட்டிக்காட்டி உள்ளது.
தொழில்நுட்ப சிக்கல்களால் UPI முடங்குவதை தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக NPCI தெரிவித்துள்ளது.