ரூ.63,000 கோடியில் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது இந்தியா. இதன் பின்னணி என்ன? இது இந்திய பாதுகாப்புக்கு என்ன பலம் சேர்க்கும்? என்பது இப்போது கேள்வியாக இருக்கின்றது .
காஷ்மீர் பகுதியில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான நிலைமையானது குற்றச்சாட்டு, பதிலடி என பெரும் போர் பதற்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு , இந்தியா தற்போது கடற்படையை மேலும் வலுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
அதற்கான ஒரு பெரிய ஏற்பாடாக ரபேல்-எம் போர் விமானங்கள் வாங்கும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுருக்கிறது . கடந்த ஜூலை மாதமே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் இந்த விமானங்களை வாங்குவதற்கான முடிவை எடுத்திருந்தது. அதன் பின் பிரான்ஸின் பிரபல தஸ்ஸோ நிறுவனம் உடன் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது அந்த பேச்சுகள் வெற்றிகரமாக முடிந்து, இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா 26 ரபேல்-எம் போர் விமானங்களை பெறுகிறது. இதில் 22 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டவை, நம்பிக்கையுடன் நேரடியாக போர் களத்தில் பங்கேற்கக்கூடியவை. மற்ற 4 விமானங்கள் இரட்டை இருக்கையுடன் இருக்கும் – பயிற்சிக்காகவும், சில நேரங்களில் சிறப்பு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.
இதோடு மட்டும் இல்லாமல், இந்த ஒப்பந்தத்தில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன – விமானங்களுடன் சில உயர் தர ஆயுதங்கள், பயிற்சி சிமுலேட்டர்கள், பராமரிப்பு வசதிகள், மேலும் நிபுணத்துவ பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இது எல்லாம் இந்திய ராணுவத்திற்கு ஒரு நீண்டகால நன்மை அளிக்கக்கூடியது.
இந்த ரபேல்-எம் விமானங்கள், தற்போது ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பல்களில் இருந்து பறக்கும் மிக்-29-கே விமானங்களை மாற்றுவதாக இருக்கிறது. அதாவது, இந்தியாவின் கடலோர பாதுகாப்பு இப்போது ஒரு புதிய பரிணாமத்தை நோக்கிச் செல்ல இருக்கிறது.
இந்த விமானங்கள் மிகுந்த துல்லியத்துடன் தாக்கக்கூடியவை, அதிக வேகத்தையும் வளைவுகளை சமாளிக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டவை. ரபேல்-எம் என்பது உலகிலேயே சிறந்த கடற்படை போர் விமானங்களில் ஒன்று என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் படி, விமானங்களின் விநியோகம் அடுத்த சில ஆண்டுகளில் தொடங்கும். 2031-க்குள் அனைத்தும் இந்தியா வசம் வந்துவிடும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் தஸ்ஸோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குப் புதிய பாதுகாப்பு சக்தியாக அமைவதோடு மட்டுமல்ல, பிரான்ஸுடன் நட்புறவையும் மேலும் வலுப்படுத்துகிறது.