தமிழக அரசின் முக்கியமான மற்றும் பாராட்டத்தக்க திட்டங்களில் ஒன்று தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதி உதவித் தொகை வழங்கும் இந்தத் திட்டம், ஏற்கனவே சுமார் 1 கோடியே 34 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், சில தகுதியுள்ள பெண்கள் இந்த திட்டத்தில் விபரங்கள் சரியாக இல்லாததால், அல்லது விண்ணப்பிப்பதில் தவறுகள் காரணமாக இடைபட்டிருக்கிறார்கள். இதை சரிசெய்யும் முயற்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, வரும் ஜூன் 4ஆம் தேதி முதல், அந்தந்த மாவட்டங்களிலுள்ள 9000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில், திட்டத்திலிருந்து தவறவிடப்பட்ட பெண்கள், உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் இதைப் உறுதி செய்து, விண்ணப்பிக்கும் நடைமுறைகள் விரைவில் தெளிவாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த விண்ணப்பப் படிவங்களை நேரில் மாநகராட்சி அலுவலகம் அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக, ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் அத்தகைய அலுவலகங்களை தொடர்புகொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசியபோது, “இந்த திட்டம் இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவிற்கு ஒரு மாபெரும் சமூகநல முயற்சி” என்றும், “ஜூலை மாதத்தில் மேலும் விண்ணப்பிக்க இயலும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம், இன்னும் அதிகமான மகளிர் இந்த திட்டத்தின் நன்மைகளை அனுபவிக்க வாய்ப்பு பெறுவார்கள். இதுவரை விண்ணப்பிக்காத பெண்கள், அல்லது மறுக்கப்பட்டவர்கள், இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..