சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்த பிரவீன் குமார் (27) தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். அவர் ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில்களிலும் ஈடுபட்டிருந்தார்.
நேற்று பிற்பகலில், சாமியார்பட்டியில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் அவரை பலத்த காயங்களுடன் தாக்கி விட்டு தப்பியோடியது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பிரவீன் குமாரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேரை கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.