இந்தியரகளை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகையும் அதிச்சியில் உறைய வைத்தது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம். இதற்கு கொடுக்கப்படும் பதிலடி “மறக்க முடியாததாக இருக்கும்” என்று நம் இந்திய பிரதமர் மோடி சொல்லியிருந்த நிலையில் அதன் ஆரம்ப புள்ளியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது “சிந்து நதியில் தண்ணீர் ஓடாவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும்” என ஆணவமாக அவர் பேசியிருப்பது இந்தியாவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருப்பதோடு உலக அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ “இந்தியாவுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். சிந்து நதி எங்களுடையது. அந்த நதி எங்களுடையதாகவே தொடர்ந்து இருக்கும். ஒன்று நமது தண்ணீர் அந்த நதியில் பாயும்… இல்லாவிட்டால் அவர்களின் ரத்தம் ஓடும். தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விட்ட இந்தியா, மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தானை பலிகடா ஆக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.
சரி இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் பற்றி ஒரு சிறிய Recap… இது 1960 ஆம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையில் அப்போதைய இந்திய பிரதமர் நேரு, பாகிஸ்தான் பிரதமர் முகமது அயூப்கான், உலக வங்கி சார்பாக இலிப் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தற்போது வரை சிந்து நதிநீர் அமலில் இருந்ததால், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 3 நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவதற்கும், நீரை எடுப்பதற்கும் இந்தியாவால் முடியாத சூழல் இருந்து வந்தது. இப்போது, இந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சீக்கிரத்தில் இனி இந்தியா புதிய அணைகள் கட்டும் எனவும் ஆற்றின் போக்கினை திசை திருப்பி அதனை கங்கை அல்லது யமுனையுடன் சேர்க்கவும் வாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் கூறப்படுவதால் இந்தியாவில் நீர்வளம் வரும் நாட்களில் செழிக்க வாய்ப்புள்ளது.