இந்தியாவின் எல்லையை ஒட்டிய நிலைகளில் பதட்டம் நீடிக்கின்ற நேரத்தில், சீனாவின் புதிய ஆயுத முயற்சி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சீனாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான CSSC தற்போது உருவாக்கியுள்ள ஒரு புதிய வகை ஹைட்ரஜன் வெடிகுண்டு, பாரம்பரிய அணுகுண்டுகளைப் போல இல்லாமல், அணுசக்தி இல்லாமல் செயல்படக்கூடியது. வெறும் இரண்டு கிலோ எடை கொண்ட இந்த சாதனம், TNT குண்டுகளைவிட 15 மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டது.
இது மெக்னீசியம் ஹைட்ரைடு என்ற பொருளைத் தழுவி செயல்படுகிறது. சோதனைக்காக பயன்படுத்தப்படும் ஒரு வெடிபொருளால் இது வெடிக்கும்போது, மெக்னீசியம் ஹைட்ரைடு ஹைட்ரஜன் வாயுவாக சிதைந்து வெளியேறும். அந்த வாயு காற்றுடன் கலந்து, சுமார் 1000 டிகிரி செல்சியஸைத் தாண்டும் ஒரு தீப்பந்தத்தை உருவாக்குகிறது. இந்த வெப்பம் 2 வினாடிகளுக்கு மேலாக நீடிக்கும், அதனால் இது ஒரு எரியக்கூடிய சூழலை உருவாக்கி, மிக நீடித்த சேதங்களை ஏற்படுத்தும்.
சோதனைகள் காட்டியதாவது, இந்த சாதனம் வெடிக்கும் போது 428 கிலோபாஸ்கல் வரை அழுத்தத்தை உற்பத்தி செய்யும் – இது TNTயின் வெடிப்பு விசையில் சுமார் 40% மட்டுமே என்றாலும், அதன் நீடித்த வெப்பத்தால் அது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியது. இதன் மூலம், ஒரு புள்ளியில் தொடங்கும் தீ, சுற்றுப்புறத்தில் சுயமாக பரவி, தாக்கத்தை விரிவாக்கும்.
இவ்வகை வெடிப்புகள் குறைந்த புகையுடன், குறைந்த தகனம் ஆற்றலுடன் நிகழ்வதால், எதிரியின் உள்கட்டமைப்புகளை – குறிப்பாக மின் நிலையங்கள், தகவல் மையங்கள் அல்லது ரன்வேகள் போன்றவற்றை – மிக துல்லியமாக குறிவைக்கும் ஆயுதமாக இது மாற்றப்படலாம்.
சீன அரசு தற்போது இந்த ஹைட்ரஜன் டெக்னாலஜியை வெகு பெரிய அளவில் விரிவுபடுத்தி வருகிறது. ஷான்சி மாகாணத்தில் உள்ள புதிய உற்பத்தி நிலையம் ஆண்டுக்கு 150 டன் மெக்னீசியம் ஹைட்ரைடை உருவாக்கும் திறனுடன் செயல்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பம், இது போன்ற உயர் வெப்ப ஆயுதங்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் திறனை சீனாவுக்கு வழங்குகிறது.
இதே நேரத்தில், சீனாவின் மற்ற இராணுவ முயற்சிகளும் இதேபோல் சுத்தமான எரிசக்தியை மையமாகக் கொண்டுள்ளன. சீனாவின் புதிய ராணுவ கப்பல்கள் மின்சார உந்துவிசை அமைப்புகளைப் பெற்று வருகின்றன. மீத்தேன் பயன்படுத்தி விண்வெளிக்கே ராக்கெட்டுகள் அனுப்பும் நாடாகவும் சீனா தன்னை உயர்த்திக்கொண்டு இருக்கிறது.
இந்த வளர்ச்சி, தைவான் தொடர்பான பதட்டங்கள் உச்சத்திலுள்ள நேரத்தில் வருகிறது. பெய்ஜிங், தைவானைச் சுற்றி தனது ராணுவப் பணிகளை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் தைவானுக்கான ஆயுத ஆதரவும், இராணுவ கூட்டுப் பயிற்சிகளும் பிராந்தியத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நவீன ஹைட்ரஜன் குண்டு, எதிர்காலத்தில் சீனாவின் போர்த் தந்திரங்களில் ஒரு முக்கிய திசையைக் குறிக்கக்கூடும். இதன் நோக்கம் – விரிவான அழிவில்லாமல், துல்லியமான தாக்குதல்களை நிகழ்த்துவது. ஒரு புள்ளியில் தீக்கம்பம் போல வெப்பம் பரவச் செய்யும் இந்த ஆயுதம், உலகத்துக்கு ஒரு புதிய பயத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது.