கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் காலமானார் என்ற செய்தி, இன்று உலகை ஒரு சோகத்தில் ஆழ்த்தி வைத்துள்ளது. 88 வயதில் உயிரிழந்த அவருக்கு சுவாச பாதையில் ஏற்பட்ட வைரஸ் தொற்று காரணமாக, சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இந்தச் சூழலில் திடீரென அவர் உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அர்ஜென்டினாவை சேர்ந்த அவர், சிறுவயதிலேயே பொதுச் சேவையின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். எளிமையான வாழ்க்கை அவருக்கு விருப்பமானது. அதனால்தான் 2013 ஆம் ஆண்டு, 16வது போப்பான பெனடிக்ட் ராஜினாமா செய்த பிறகு, 266வது திருத்தந்தையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், அதிகாரத்துக்கும் ஆடம்பரத்துக்கும் விலகி, உண்மையான பணிவின் வழியிலேயே சென்றார். திருத்தந்தை அசிசியின் “பிரான்சிஸ்” என்ற பெயரையே அவர் தன் பெயராக எடுத்துக் கொண்டது கூட, அவருடைய மனசாட்சியின் வெளிப்பாடாக இருக்கிறது.
தென் அமெரிக்கா பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையாகும் இந்தப் பெருமை, அவருடைய சாதனைகளில் ஒன்று. உலக அமைதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். “அனைவரும் சமம்” என்ற சமூகநீதிக்கான கோஷத்தை மிகக் கடுமையாக நம்பியவர். எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்தவர். அகதிகளுக்கு, புலம்பெயர்வோருக்கு உரிமை கேட்டவர். உலகில் போர்களுக்கு முடிவுகொண்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டவர்.
போப்பாக இருந்த பிரான்சிஸுக்கு மாதம் 32,000 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கிடைக்க தகுதி இருந்தாலும், அவர் அந்த தொகையை முழுமையாகவே மறுத்துவிட்டார். “எனக்கு சம்பளம் வேண்டாம்,” என்ற அழுத்தமான நிலைப்பாட்டுடன், அந்த பணத்தை தேவாலயங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்கச் செய்தார். இது மாத்திரமல்லாமல், அவருக்கு இதற்கு முன்பு வழங்கப்பட்ட கார்டினல் போன்ற பதவிகளின் சம்பளங்களையும் அவர் ஏற்க மறுத்துள்ளார். அதிகாரத்திலும் பணத்திலும் ஆசை இல்லாமல், அடிமட்ட மக்களின் சேவையே தனது கடமையாகக் கண்ட அவர், தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் மனித நேயத்தின் மிகச்சிறந்த உருவாக திகழ்ந்தார்.
தனக்கென தனி வசதிகள் வேண்டாம், ஆடம்பரங்கள் வேண்டாம் என்று தேவாலய நிர்வாகத்திடம் சொல்வது கூட அவருடைய இயல்பாகவே இருந்தது. இத்தனை பெரிய அதிகாரத்திலும், இத்தனை எளிமையா என்று உலகமே வியந்தது. அதனால்தான் அவரைப் பற்றி நினைக்கும் போது, ஒரு மதத் தலைவர் நினைவாக இல்லாமல், ஒரு மனித நேயத் தலைவர் நினைவாகவே இருக்கும்.
இப்போது உலகம் ஒரு அற்புதமான மனிதனை இழந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கை மற்றும் பண்புகளை பின்பற்றுவது தான் அவருக்கு நாம் தரக்கூடிய உண்மையான அஞ்சலி.