Wednesday, April 23, 2025

கழுத்தை நெறிக்கும் “gold loan” விதி! விரைவில் வரப்போகும் “good news”!

வங்கிகளில் தங்க நகைக் கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் வலுப்பெற்று வருகிறது. பொதுமக்கள், குறிப்பாக விவசாயிகள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், அவசர தேவைக்கு நகைக்கடனை நம்புகின்றனர். ஆனால், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள் அவர்களுக்கு அதிக சிக்கல்களை உருவாக்கி உள்ளது.

புதிய விதி படி, கடன் காலாவதியான நாளில் வட்டியுடன் அசலும் கட்டி, நகையை மீட்ட பின்பே மறுநாளில் மீண்டும் அடகு வைக்க இயலும். அதே நாளில் வட்டி மட்டும் கட்டி நகையை தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது. தங்கத்தின் விலை உயர்வில், முழு தொகையை செலுத்தி பின்னர் மீண்டும் கடன் பெற வேண்டிய அவசியம், நிதிச் சுமையை அதிகரிக்கிறது.

இதனால், மக்கள் முறைசாரா கடன் அல்லது தனியாரிடம் அதிக வட்டிக்கு பணம் எடுத்து நகையை மீட்டுவைத்து மறுபடி அடகு வைக்க நேரிடுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களிடம் மாதந்தோறும் வட்டி செலுத்த வலியுறுத்தப்படுவதும் மன உளைச்சலாக இருக்கிறது.

இந்த புகார்களைப் பற்றி கூட்டுறவு வங்கிகள் விளக்குவது என்னவென்றால், ரிசர்வ் வங்கியின் விதிமுறையின்படி, 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் கடன் பெற்றவர்கள் வருடத்தில் ஒரு முறை மட்டும் வட்டி செலுத்தினால் போதும். ஆனால் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள், ஒவ்வொரு 3 மாதத்துக்கும் அசலும், வட்டியும் கட்ட வேண்டும்.

இந்த விதி ஏராளமான மக்களுக்கு சிரமம் தருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தக் கட்டுப்பாட்டை 4 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் மாற்ற ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்தவுடன், உடனடியாக செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த மாற்றம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிலர் இந்த விதிகள் தனியார் நிறுவனங்களுக்கு உதவியாக இருப்பதாகவும், மக்கள் மேலும் கடன் எடுக்க வேண்டிய நிலையை உருவாக்கும் என்றும் விமர்சனம் செய்கிறார்கள்.

இக்கட்டான சூழலில் பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை. இல்லையெனில், கந்துவட்டியும், நகை ஏலமும் தவிர்க்க முடியாத நிலையாகிவிடும்.

Latest news