Saturday, April 19, 2025

நகை கடன் வாங்கியவர்களின் தலையில் இறங்கிய இடி! கூட்டுறவு வங்கிகளிலும் புதிய விதிமுறை! நடைமுறைக்கு வந்த திருத்தம்!

தங்க நகைகளை வாங்கி வைப்பது ஆடம்பரத்துக்கு என்பதை மீறி “ஒரு Emergency-ன்னா கைல இருக்கிற நகையை அடகு வைச்சு பணமா மாத்திக்கலாம் பா…” என்ற மற்றொரு முக்கிய காரணமே நடுத்தர மக்களை தங்கத்தை நாடித் தேடி வாங்க வைத்துவிடுகிறது.

இந்நிலையில் நகை அடகு வைப்பது தொடர்பாக சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை கொண்டு வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதனால் சமீப நாட்களில் தேசிய வங்கிகளில் அடகு வைத்த நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து வந்தனர். ஆனால், தற்போது அதற்கும் வந்திருக்கிறது சிக்கல். அங்கும் சில புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தேசிய வங்கிகளைப் பொறுத்தவரையில் குறைந்த வட்டிக்கு நகை கடன் வழங்கப்படுவதோடு ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு வட்டி தொகை வசூலிக்கப்பட்டாலும், அதிகபட்சம் 10.25 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூல் செய்யப்படுவதில்லை. மாதக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட அதிகபட்சம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது சாமானிய மக்களுக்கு வசதியான ஒன்றாக இருப்பதால் தேசிய வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெறுகிறார்கள்.

பழைய விதிமுறையின்படி ஒருவேளை மொத்த தொகையையும் செலுத்தி நகைகளை மீட்க முடியவில்லை என்றால் ஓராண்டு முடிவில் வட்டியை மட்டும் செலுத்தும்போது நகைகள் மறு அடகு வைக்கப்பட்டதாக கணக்கிடப்படும். ஆனால் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறையின் அடிப்படையில் வட்டியோடு அசலையும் சேர்த்து முழு தொகையும் செலுத்தினால் தான் நகையை திருப்பி மீண்டும் அடகு வைக்க முடியும். அதுவும் அடுத்த நாள் தான் அடகு வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் தேசிய வங்கிகளின் நகைகளை அடகு வைத்தவர்கள் அவற்றை மீட்டு கூட்டுறவு வங்கிகளை அடகு வைப்பதை பார்க்க முடிகிறது.

ஆனால் தற்போது கூட்டுறவு வங்கியில் புதிய விதிமுறைகளின் படி இரண்டு லட்சம் ரூபாய் வரை நகை கடன் பெற்றவர்கள் மட்டுமே ஆண்டு வட்டி செலுத்த வேண்டும் என்றும் அதற்கு மேல் பெற்றால் மாத வட்டி செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அடகு வைத்தவர்களிடம் இதை வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நிதியாண்டு முடிவடைந்ததை தொடர்ந்து ஒருசில மாதங்களுக்கு முன்பு அடகு வைத்தவர்களை கூட வட்டி செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதால் பலரும் வேறு வழியின்றி வட்டி செலுத்தி இருக்கிறார்கள்.

மாற்றியமைக்கப்பட்ட புதிய விதிமுறையின் படி நகைகளை அடகு வைத்து அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்றாலும் இரண்டு லட்சத்திற்குள் கடன் பெற்றால் மட்டுமே ஆண்டு வட்டி செலுத்த வேண்டும். அதற்கு மேல் கடன் பெற்றவர்கள் மாதவட்டி செலுத்த வேண்டும் என்பதை அறியாமல் பலரும் இதை தெரிந்து கொள்ளாமல் வட்டி செலுத்தவில்லை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறை குறித்து விளக்கி கூறி வட்டி செலுத்த சொல்லி இருப்பதாக கூறியிருக்கின்றனர் அதிகாரிகள்.

Latest news