பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் ஆதரித்த பான் மசாலா விளம்பரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
“குங்குமப்பூ தடவிய குட்கா” என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் பான் மசாலா ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை வரவழைக்கிறது. எனவே மக்களை தவறாக வழிநடத்திய நிறுவனம் மீதும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் நடிகர்கள் மற்றும் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.