உலக தாய்மொழி தினத்தையொட்டி, ‘எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக தாய்மொழி தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழியின் சிறப்பு, அவசியம், பன்மொழி கலாச்சாரம் ஆகியவற்றை போற்றவும் உணர்த்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், உலக தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல, பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி எனவும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.