கோவை போத்தனூர் சீனி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (40). சொந்தமாக கார் வைத்திருக்கும் இவர் ஆன்லைன் புக்கிங் மூலமாக வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காரில் வந்த இளைஞர் ஒருவர் ஊட்டி செல்வவேண்டும் என அறிவழகனிடம் கேட்டுள்ளார்.
அப்போது கார் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை என்ற இடத்தை கடந்த போது அந்த இளைஞர், டிரைவர் அறிவழகனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார். இதையடுத்து அறிவழகனை தாக்கிய அந்த இளைஞர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காரமடை காவல் நிலையத்தில் அறிவழகன் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் பதுங்கியிருந்த தனுஷ் (20) என்ற இளைஞரை கைது செய்து அவர் கடத்திச் சென்ற காரை மீட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.