Tuesday, December 23, 2025

“வேலை வெட்டி இல்லாத அண்ணாமலை போன்றவர்கள்”… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

ஊரில் வேலை வெட்டி இல்லாமல், அண்ணாமலை போன்றவர்கள் பரப்பும் அவதூறு கருத்துகள் பற்றி கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், உயிர் பாதுகாப்பு ஹேக்கத்தான் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து சாலை பாதுகாப்பிற்காக தமிழக அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களையும், அதன் பலன்களையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சியில் சாலை பணிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அப்போது, அதானி – திமுக தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை, அதனால் சில கருத்துகளை கூறி வருகிறார்கள் என்று கூறினார். உள்ளூரில் நின்றாலும் தோல்வி, வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள், தங்களது இருப்பிடத்தை காட்டுவதற்காக அவதூறு கருத்துகளை பரப்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அந்த அவதூறு கருத்துகள் பற்றி கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Related News

Latest News