Monday, December 23, 2024

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை : பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதி

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதலே வானம் இருண்ட நிலையில் காணப்பட்டநிலையில், பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அடையாறு, பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம்,எழும்பூர் மற்றும் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் அவதிக்குள்ளாகினர்.

Latest news