Thursday, December 26, 2024

யூடியூப் சேனல்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கும் ஆபத்து!!!

அண்மைக் காலமாக பிரபல யூடியூபர்களை குறிவைத்து ஹேக்கர்கள் விசித்திர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் யூடியூபர்கள் அரும்பாடுபட்டு கட்டமைத்த அவர்களது சேனல் நிர்மூலம் ஆவதோடு, அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கும் சாமானிய பார்வையாளர்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறது.

வங்கி இருப்பை குறிவைத்த ஹேக்கர்களின் ஆரம்ப தாக்குதல் தற்போது பல்வேறு திசைகளிலும் வியாபித்துள்ளது.

இந்த காலத்தில் மிகப்பெரும் நிறுவனங்களின் சர்வர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கணினியை ஹேக்கர்கள் குறிவைத்தார்கள்.

அவ்வாறு ஹேக் செய்யப்படும் கணினியை மீளப்பெற, சம்பந்தப்பட்டவர்கள் ஹேக்கர்களுக்கு கிரிப்டோ கரன்சியில் பெருந்தொகை அழ வேண்டியிருக்கும். இந்த ரான்சம்வேர் தாக்குதல்கள் தற்போது பிரபல யூடியூபர்களையும் குறி வைத்துள்ளன.

பிரபல யூடியூப் சேனல்களை ஹேக்கர்கள் குறிவைப்பதன் நோக்கம் இரு வகையில் அமைகிறது. முதலாவது குறி வைப்பு, யூடியூப் பிரபலத்துக்கு. சேனலை கைப்பற்றும் ஹேக்கர்கள் வழக்கமான ரான்சம்வேர் பேரங்களை முன்வைப்பார்கள்.

யூடியூபர்களை பணியச் செய்ய, சேனலின் வீடியோக்களை அழித்து, சப்ஸ்கிரைபர்களை தெறித்தோடச் செய்யும் வகையிலான வீடியோக்களை பதிவேற்றி மிரட்டுவார்கள்.

யூடியூபில் ஏராளமாய் சம்பாதிக்கும் பிரபலங்களை மட்டுமே ஹேக்கர்கள் குறிவைப்பதால், இந்த ரான்சம்வேர் பேர் எளிதில் படித்துவிடுகிறார்கள்.

சேனலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த கணமே, கமெண்ட் பகுதியை வெகுவாய் அல்லது முழுவதுமாய் கட்டுப்படுத்துவார்கள்.

அதில் முக்கியமாக சேனலை பறிகொடுத்த யூடியூபர், தனது சப்ஸ்கிரைபர்களை எச்சரிக்க வழியின்றி முடக்குவார்கள்.

முதல் குறி வைப்பு யூடியூபருக்கு எனில், இரண்டாவது குறி பிரபலத்தின் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கும் அப்பாவி பார்வையாளர்களுக்கு.

சேனல் ஹேக் செய்யப்பட்ட விவரம் சப்ஸ்கிரைபர்களை அண்டும் முன்னர் தங்களது வித்தைகளை களமிறக்குவார்கள். யூடியூப் பிரபலத்தின் வழக்கமான வீடியோ பாணியில், பிளேலிஸ்டில் இருக்கும் பிரபல வீடியோவை மீண்டும் வலைவீசுவார்கள். கூடவே டிஸ்கிரிப்ஷனில் இருக்கும் இணைப்பு சொடுக்குமாறு சப்ஸ்கிரைபர்களை தூண்டுவார்கள்.

அப்படியான இணைப்புகளை சப்ஸ்கிரைபர் சொடுக்கினால் போச்சு. மால்வேர் வேகமாக சப்ஸ்கிரைபரின் கணினியில் இறங்கி புதிய ஆட்டத்தை ஆரம்பிக்கும்.

இப்படி உலகம் முழுக்க ஏராளமான யூடியூப் பிரபலங்கள் தங்கள் சேனலை ஹேக்கர்களிடம் பறிகொடுத்து, பின்னர் பெருந்தொகையை பணயமாக அழுது சேனலை மீட்டிருக்கிறார்கள். மேலும், சேனலை சப்ஸ்கிரைப் செய்தவர்களும் மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகி தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரியளவிலான இணைய மோசடிகள் அதிகரித்த காலத்தில்தான் இந்த யூடியூப் ஹேக்கர்களும் தங்களது தேடலை ஆரம்பித்தனர்.

யூடியூபர்கள் குறிவைக்கப்படுவதை அறிந்ததும், கூகுள் நிறுவனம் யூடியூப் சேனல்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை இறுக்கியது. பல்லடுக்கு பாதுகாப்பு, பல வகையிலான அடையாளம் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டது.

ஆனால் குக்கிகள் வழியாக குறிவைக்கும் ஹேக்கர்களின் நோக்கத்துக்கு, யூடியூப் பிரபலங்கள் எளிதில் இரையாகிறார்கள். எனவே, ஹேக்கர்ஸ் தாக்குதலை உத்தேசித்து, தாங்கள் பரிந்துரைக்கப்படும் பல்லடுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஓடிபி சரிபார்ப்புகளை முறையாக பின்பற்றுமாறு கூகுள் அறிவுறுத்துகிறது. ஆனால், யூடியூபர்களின் அலட்சியம் அவர்களின் முதலுக்கு மோசம் செய்கிறது.

ஹேக்கர்களின் தாக்குதல் அதிகரித்தது, முறைகேடாக அழிக்கப்படும் வீடியோக்களை பிற்பாடு மீட்கும் வசதியை கூகுள் செயல்படுத்தியது. ஆனபோதும் ஹேக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

எனவே யூடியூபர் அல்லது சப்ஸ்கிரைபர் என யூடியூபில் சதா சஞ்சரிப்போர் எவராயினும், கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. யூடியூபர்கள் தங்களுக்கு வருமான வாய்ப்பு மற்றும் விளம்பரதாரர் பெயரிலான மெயில்களை கவனமாக கையாள்வதுடன், இணைப்புகளை எச்சரிக்கையுடன் திறப்பது நல்லது. அதே போன்று, சப்ஸ்க்ரைபர்ஸ் வீடியோவின் கீழிருக்கும் இணைப்புகளை வாங்குவதில் ஏக எச்சரிக்கை தேவை.

Latest news